தமிழகத்தில் ஆன்மிகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் ஆன்மிகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது
கோவை: தமிழகத்தில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் ஆன்மிகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்று தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியது:
பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துவங்கி உள்ளோம். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி இணையவுள்ளார். உலக அளவில் மிகப்பெரிய கட்சியாகவும், தமிழகத்தில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் ஆன்மிகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது. முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்திருக்க வேண்டும்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ளது எந்த பூ என விவாதம் எழுந்துள்ளது, தாமரை இல்லை எனவே எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதில் யானை உள்ளதால் அந்த சின்னத்தை உடைய பகுஜன் சமாஜ் கட்சியினர் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சையாக தொடங்க வேண்டிய நிகழ்ச்சியை விமர்சனத்தோடு விஜய் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி கட்சியின் பலத்தோடு தான் பாஜகவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் அதில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் பாடநூல்களின் விலையை உயர்த்தியுள்ளது, வேங்கைவையல் விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு கிடைக்காதது போன்றவை எல்லாம் இந்த அரசு சமூக நீதியில் தோல்வி அடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது என தமிழிசை கூறினார்.