உடற்தகுதியுடன் இருந்தால் 2027 உலகக்கோப்பையிலும் ரோஹித், கோலி விளையாடுவர் என நம்புவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ்வும், ஒருநாள் தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மாவும் வழிநடத்துகின்றனர்.
மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் விளையாட உள்ளனர். டி20 போட்டி ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளிலும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் மும்பையில் இருந்து இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர். முன்னதாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் முதன்முறையாக செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, உடற்தகுதியுடன் இருந்தால் 2027 உலகக்கோப்பையிலும் ரோஹித், கோலி விளையாடுவர் என நம்புகிறேன்.
இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இன்னும் ஃபார்முடன் இருப்பதால் நம்பிக்கை உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் போன்ற பெரிய தொடர்களில் அவர்கள் பங்களிப்பார்கள். அணியின் வெற்றிக்காக வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை இருவரும் உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.