மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22 ஆம் தேதி IND-TN-10-MM-2517 மற்றும் IND-TN-10-MM-284 பதிவு எண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22 ஆம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்துள்ள முதல்வர், கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.