திருவனந்தபுரம்: தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கேரள மாணவி உள்பட 3 மாணவர்கள் இறந்ததற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய தில்லியின் பழைய ராஜிந்தா் நகரில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் எனும் பயிற்சி மையத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டடத்தின் அடித்தளத்தில் இயங்கி வரும் நூலகத்தில் தீடிரென மழை-வெள்ளம் சூழ்ந்ததில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் எதிா்பாராவிதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசியப் பேரிடா் மற்றும் மீட்புப் படையினா் மேற்கொண்ட தொடா் 7 மணி நேர தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பின்னா் 3 மாணவா்களின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
இதில், உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தை சோ்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவின் டால்வின் (28) ஆகியோா் உயிரிழந்ததாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கேரள மாணவிகள் இறந்ததற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுதில்லியில் உள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் எனும் பயிற்சி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டடத்தின் அடித்தளம் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களில் உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளத் சேர்ந்தவரும் ஜேஎன்யு ஆராய்ச்சி மாணவரான நிவின் டால்வினும் ஒருவர். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் தானும் கலந்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகிய இருவரை தில்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து குற்றவியல் கொலை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜிந்தா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்று மத்திய தில்லியின் துணைக் காவல் ஆணையா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் கலந்து கொண்ட தில்லி அமைச்சர் கோபால் ராய், ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவிகளின் மரணம் குறித்து தொடர்பாக விரைந்து விசாரிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று கூறினார்.
"சம்பவம் நடந்த விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக, அதை விரைவாக விசாரிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று ராய் கூறினார்.
மேலும், கட்டடத்தின் அடித்தளத்தில் சட்டவிரோதமாக பயிற்சி நிறுவனத்தின் நூலகம் இயங்கி வந்தத தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க தில்லி மாநகராட்சியும் (எம்சிடி) அறிவுறுத்தியுள்ளது என்றார்.
தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை நீர் சூழ்ந்ததால் 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களும், தண்ணீர் தேங்கியது தொடர்பான மின்கசிவு காரணமாக மற்றொரு மாணவியும் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். தலைநகரில் இது நடப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ," என்றும் கூறியுள்ளார்.
மேலும் செவ்வாய்க்கிழமைக்குள் மழைவெள்ளம் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் புகுந்ததற்கான காரணங்கள் குறித்து விரைந்து விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.