சென்னை: நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம். ஆனால் இது குறித்து பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பேரவையில் பேசுவதற்கு அனுமதிக்கக்கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொண்டால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரித்தார்.
ஆனால் பேரவைத் தலைவரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம். ஆனால் இது குறித்து பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து பேரவையில் நியாயம் கிடைக்கவில்லை. பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்தோம் என்பதால் எங்களை வெளியேற்றியுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குரல் எழுப்பாதது கண்டிக்கத்தக்கது. மருத்துவமனையில் மருத்துவர்கள், மருந்துகள் போதிய மருந்துகள் இருப்பு இருப்பதாக அரசு கூறுவது பச்சை பொய்.
மக்களின் பிரச்னையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.
திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலரும் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் அதிகம் நடமாடும் நகரின் மைய பகுதியில் 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
கள்ளச்சாராய மரணத்தை மறைக்க மாவட்ட ஆட்சியர் முயற்சி செய்ததாகவும், கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இறந்தார்கள் என மாவட்ட ஆட்சியர் முதலிலேயே கூறியிருந்தால் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்திருப்பார்கள்.
திமுக கவுன்சிலர்கள் 2 பேர் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக பொதுமக்கள் கூறினார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்தில் ஆளும் கட்சி போட்டோ ஒட்டப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.