தற்போதைய செய்திகள்

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

ஐரோப்பாவைச் சேர்ந்த 29 நாடுகளுக்குச் செல்ல வழங்கப்படும் ஷெங்கன் விசா கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

DIN

ஐரோப்பிய ஆணையம் அடுத்த மாதம் ஜூன் 11 முதல், ஷெங்கன் விசா கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது. பணவீக்கம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. ஷெங்கன் விசா வாங்குவதற்கு கடந்தாண்டு முதல் இந்தியர்கள் கணிசமான அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

6 வயது முதல் 12 வயது வரையுள்ள சிறார்களுக்கு 40-லிருந்து 45 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.3,620 -ல் இருந்து ரூ. 4,073) வரை உயர இருப்பதாகவும், பெரியவர்களுக்கு 80 -ல் இருந்து 90 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.7,241 -ல் இருந்து ரூ. 8,146 - இன்றைய மதிப்பில்) வரை உயர இருப்பதாக ஸ்லோவேனிய வெளியுறவு மற்றும் ஐரோப்பிய அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதியின்றி தங்கியிருக்கும் குடிமக்களைத் திருப்பி ஏற்றுக்கொள்ளாத நாடுகளுக்கு விசா கட்டணத்தை 180 யூரோ (ரூ.16,290) வரை உயர்த்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

’குறுகிய கால ஷெங்கன் விசா (டைப் சி விசா) கட்டணத்தை உலகளவில் 12 சதவீதம் உயர்த்த ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூன் 11, 2024 முதல் அமலுக்கு வரும்’ என்று ஸ்லோவேனிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷெங்கன் விசா என்பது ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் ஐரோப்பாவின் 29 நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒருவகை விசா ஆகும். ஷெங்கன் நாடுகள் என்பது 25 ஐரோப்பிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய 29 நாடுகளைக் கொண்ட பகுதியாகும். இதில் இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின், ஃப்ரான்ஸ், நார்வே உள்ளிட்ட 29 நாடுகள் அடங்கும். இந்த விசாவில் தங்குவதற்கு 90/180 என்ற விதி அமலில் உள்ளது. இதன்படி, விசா வைத்துள்ளவர்கள் ஷெங்கன் நாடுகளில் ஏதேனும் 180 நாள்களில் 90 நாள்கள் வரை தங்கலாம். அனுமதியின்றி 90 நாள்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம், நாடு கடத்தல், ஷெங்கன் நாடுகளுக்குள் நுழையத் தடை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஷெங்கன் விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்படும். கடைசியாக, கடந்த 2020-ல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த முறை பணவீக்கம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் விசா இல்லாத ஒப்பந்தத்தை எதிர்பார்த்த துருக்கி குடிமக்களுக்கு இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ல் ஷெங்கன் விசாவுக்கான விண்ணப்பங்கள் 1.3 கோடியைத் தொட்டிருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை (2022) விட 37 சதவீதம் அதிகமாகும். கடந்த 2019-ல் ஷெங்கன் விசாவுக்கான விண்ணப்பங்கள் 1.7 கோடியை தொட்டதே இதுவரையில் அதிகமாகும்.

சமீப ஆண்டுகளாக ஐரோப்பா செல்வதற்கான இந்தியர்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2023-ல் ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்த இந்தியர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 43 சதவிதம் உயர்ந்துள்ளது.

ஷெங்கன் விசா விண்ணப்பிப்பதில் இந்தியா 9.6 லட்சம் விண்ணப்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 11 லட்சம் விண்ணப்பங்களுடன் சீனா உள்ளது. கடந்த 2018 முதல் ஷெங்கன் விசா விண்ணப்பங்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக துருக்கி மற்றும் இந்தியா உள்ளன.

இந்தியர்களுக்கான பயணத்தை எளிதாக்க விசா முறையில் புதிதாக ’கேஸ்கேட்’ (Cascade) முறையை ஐரோப்பிய ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் விசாவின் பலமுனை நுழைவு காலத்தை எளிதாக நீட்டிக்க முடியும்.

இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு விசாக்களை சட்டப்பூர்வமாக பயன்படுத்தியிருந்தால், அவர்கள் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கான பலமுனை விசாவைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். இதன் மூலம் எந்த 180 நாள்களிலும் 90 நாள்கள் தங்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் பின்னர் அவர்கள் 5 ஆண்டுகளுக்கான விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

கட்டடத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பானிபூரி விற்பனையாளா்களை தாக்கிய சிறுவா்கள் கைது

நெல்லையப்பா் கோயில் குறித்த வழக்கு: அறநிலையத் துறை அதிகாரி முன்னிலையாக உத்தரவு

SCROLL FOR NEXT