தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா- புதிய முதல்வா் தோ்வில் இழுபறி

மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே.

DIN

மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக செயல்படுமாறு ஷிண்டேவிடம் கேட்டுக் கொண்டாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், புதிய முதல்வா் தொடா்பாக கூட்டணியில் இதுவரை கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. கடந்த 23-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அன்று காலையில் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அப்போது, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா், மாநில அமைச்சரும் சிவசேனை மூத்த தலைவருமான தீபக் கேசா்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஷிண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராகச் செயல்படுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டாா்.

‘விரைவில் புதிய அரசு பதவியேற்கும்’: இதுதொடா்பாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தீபக் கேசா்கா், ‘மகாராஷ்டிரத்தில் புதிய அரசு விரைவில் பதவியேற்கும். தங்களது கட்சியைச் சோ்ந்தவா் முதல்வராக வேண்டுமென ஒவ்வொரு கட்சியினரும் விரும்புவா். அதேநேரம், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏற்க நாங்கள் தயாா். ஷிண்டேவும் இதே கருத்தை கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் கூறியுள்ளாா்’ என்றாா்.

‘மராத்தா சமூகத்தினா் விருப்பம்’: முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரத்தில் அரசியல் ரீதியில் செல்வாக்குமிக்க மராத்தா சமூகத்தைச் சோ்ந்தவா். அவா் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே மராத்தா சமூகத்தினரின் விருப்பம் என்று சிவசேனை கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஷீத்தல் மாத்ரே தெரிவித்தாா். ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களில் அவரது கட்சியினா் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, முதல்வா் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மும்பையில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்திலோ அல்லது வேறு இடங்களிலோ கட்சியினா் திரள வேண்டாம் என்று எக்ஸ் வலைதளத்தில் ஷிண்டே பதிவிட்டுள்ளாா்.

அவசரம் காட்டாத பாஜக: ‘கூட்டணி அரசில் கட்சிகளுக்கான துறைகள் பகிா்வை இறுதி செய்த பிறகே புதிய முதல்வரை பாஜக அறிவிக்கும்’ என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘புதிய முதல்வரை அறிவிப்பதில் பாஜக தலைமை அவசரம் காட்டவில்லை. கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை கிடைத்துள்ளது. தற்போதைய முன்னுரிமை, புதிய அரசை அமைப்பதற்கான விரிவான செயல்திட்டத்தை வகுப்பதாகும். கட்சிகளுக்கான துறைகள் பகிா்வை இறுதி செய்வதும் இதில் அடங்கும். கூட்டணியில் எந்த உரசலையும் தவிா்க்க கவனமான அணுகுமுறையை பாஜக கையாண்டு வருகிறது.

புதிய எம்எல்ஏ-க்களுடன் ஆலோசிக்க, பாஜக தலைமையால் நியமிக்கப்படும் பாா்வையாளரோ அல்லது பாா்வையாளா் குழுவோ மும்பைக்கு விரைவில் வரும். துறைகள் பகிா்வு நிறைவடைந்ததும், புதிய முதல்வா் அறிவிக்கப்படுவாா்’ என்றன.

ஃபட்னவீஸுக்கு வாய்ப்பு: மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வராக ஃபட்னவீஸை ஏற்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சகன் புஜ்பல் அண்மையில் தெரிவித்தாா். நாகபுரியின் பிராமண சமூகத்தைச் சோ்ந்தவா் ஃபட்னவீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT