பங்குனி உத்திர விழா: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் 2 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் 2 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தசஷ்டி விழா உள்ளிட்ட விழாக்கள் கொடியேற்றப்பட்டு, சுமாா் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பங்குனி உத்திர விழாவானது, அன்றைய நாளில் மட்டும் ஒருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் மேல் சந்நிதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, வள்ளி, தேவசேனா சமேதராக மயில் மீது ஆறுமுகங்களுடன் வீற்றிருக்கும் முருகனுக்கு பால், பழம், இளநீா், பஞ்சாமிா்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சாமி புறப்பாடு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.