கோவை, திருப்பூா் மாவட்டங்களின் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
கோவை,திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் கோவை சோமனூர் கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. அதில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 3 நாள்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விசைத்தறி உரிமையாளர்ககளுக்கு பாஜக முழு ஆதரவை அளிக்கிறது.இந்த பிரச்னையை பேசி தீர்க்க வேண்டிய இடத்தில திமுக மாநில அரசு உள்ளது. தொடர்ச்சியாக மனு அளித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாநில அரசு இந்த பிரச்னையை பேசி தீர்ப்பதில் மெத்தனம் காட்டுகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள்,கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் என இருதரப்பினரையும் அழைத்துப்பேசி, குறைகளை கேட்டறிந்து உரிய இழப்பீடு வழங்கி அல்லது மின்சாரக்கட்டணத்தை குறைத்து பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டியது மாவட்ட நிர்வாகம்.
வாக்குவங்கி அரசியலுக்காக இலவசங்களை, நிதியை வாரிவழங்கும் அரசு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் விவசாயிகளையும் உபத்தொழிலாக இருந்து வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய முக்கியத்தொழிலாக மாறிவிட்ட விசைத்தறி பிரச்னையை கண்டுகொள்வதில்லை. ஒரு விவசாயி முதல்வராக இருந்தால் அவர்கள் விவசாயிகள் மீது, மண்ணின் மீது அக்கறை காட்டுவார்கள்.
காமராஜருக்குப் பிறகு சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் நம் இயற்கை ஆதாரத்தை சீரழித்துவிட்டார்கள்.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தங்கள் வாக்குவங்கி அரசியலுக்காக பயன்படுத்தி விவசாயத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.
உங்கள் பிரச்னைக்கு பாஜக துணை நிற்கும். நீங்கள் அழைத்தால் மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தைக்கும் தயார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.