காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை(ஏப்.30) பொறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை (ஏப்.30) சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர்.
இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரா் சந்நிதிக்கு வந்ததும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற தீட்சை நாமம் சூட்டப்பட்டது.
இதன் பின்னா் கோயிலிலிருந்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டும் ராஜவீதி வழியாக மங்கல மேள வாத்தியங்களுடன் சங்கர மடத்துக்கு ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா்.
சங்கர மடத்தில் இளைய மடாதிபதிக்கு மந்திர உபதேசம் செய்யப்பட்டு, 71 ஆவது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்,துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி , டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி காமாட்சி சங்கர மடம் மற்றும் அம்மன் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.