விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்பூகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்ற மகளிர் மாநாடு மகளிர் பெருவிழாவாக சிறப்பு நடந்து முடிந்திருக்கிறது. இதுபோன்ற மகளிர் மாநாட்டை யாராலும் நடத்த முடியாது.
விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவை யாராலும் நடத்த முடியாத பொதுக்குழுவாக அது அமையும். இந்த சிறப்பு பொதுக்குழு பாமகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.
மேலும், சென்னை திருமங்கலம் அண்ணாநகரில் சிறுமியிடம் தகாத முறையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் தகாத முறையில் ஈடுபட முயன்றதாக வெளியான செய்தி அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட மேதை அம்பேத்கர் உரைகள் குறித்த 17 தொகுப்புகளை தமிழக அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் வெளியிட்டு இருப்பது சிறப்புக்குரியது. அம்பேத்கர் குறித்த நூல்களை இன்னும் முழுமையான அளவில் தமிழக அரசு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரையும், அவர்களின் 9 மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து மீட்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறவழிச் சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.