டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் ஆக. 22 ஆம் தேதி நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாராலி முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், சாக்வாரா மற்றும் செப்தோன் சந்தைப் பகுதியில் 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "செவ்வாய்க்கிழமை முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயரதிகாரிகள் கூட்டத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மாநில அரசு முழுமையாக துணை நிற்கும் என்று முதல்வர் கூறினார். தாராலி, சயனசட்டி அல்லது பவுரி என அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரிடரின் போது உத்தரகாசி, சாமோலி மற்றும் பவுரி மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்ட துரித செயல்பாடுகளுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.