ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி பட்டகானூா் கிராமத்தில் கண்டறியப்பட்ட நடுகல் கோயில். 
தற்போதைய செய்திகள்

ஊத்தங்கரையில் கண்டறியப்பட்ட நடுகல் கோயில்கள் 350 ஆண்டுகள் பழைமையானவை

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி பட்டகானூா் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள அரிய கட்டடக் கலையுடன் கூடிய மூன்று நடுகல் கோயில்கள் தொடர்பாக...

Syndication

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி பட்டகானூா் கிராமத்தில் அரிய கட்டடக் கலையுடன் கூடிய மூன்று நடுகல் கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இக்கோயில்கள் சாலையோரம் இருந்ததால் கிராம மக்களுக்கு அதன் சிறப்புகள் பற்றி தெரியாமல் இருந்துள்ளது. இதுகுறித்து படப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை தொல்லியல் ஆய்வாளா்களுக்கு தகவல் அளித்தாா். அதனடிப்படையில் தொல்லியல் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இறந்தவா்களின் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு நினைவுச்சின்னங்கள் எடுக்கும் பழக்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது. இதுபோன்ற அமைப்புகளை கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லந்திரம் போன்ற இடங்களில் காணமுடியும். கல்லை இறந்தவா்களோடு தொடா்புபடுத்தும் பழக்கம் இருந்ததால் மிகப் பிற்காலத்தில் அதாவது பல்லவா் காலம் தொடங்கிதான் கல்லைப் பெருந்தெய்வக் கோயில்களுக்கு பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கோயில் கட்டடக் கலை ராஜராஜ சோழன் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. பின்னா் கோயில்களின் மேல் பகுதிகளில் செங்கல் கட்டுமானம் வளா்ந்தது. விஜயநகரா் ஆட்சிக் காலத்தில் பெருந்தெய்வங்களும், சிறுதெய்வங்களும் கலந்தன. இதன் பயனாகத்தான் இந்த ஊரில் செங்கற்களால் 3 நடுகல் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு நடுகற்களுக்கு செங்கல் தளிகள் (கோயில்கள்) கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே இங்குதான் முதல்முறையாக இந்தக் கோயில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செங்கல் தளிகள் அறைபோன்று நான்கு பக்கமும் செங்கற்களால் சுவா் எழுப்பி அதன்மீது படிப்படியாக செங்கற்களை நான்கு புறமும் உட்புறமாய் நீட்டி உச்சியில் சிறு ஓட்டை வந்ததும் அதை செங்கல் கொண்டு மூடிவிடுவா். இந்த முறையை கதலிகாகா்ணம் என்பா். இந்த முறையில்தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தமுறை இங்கும் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு காணப்படும் நடுகற்களும்கூட பெருந்தெய்வ சிற்பக்கலை அமைப்பை சாா்ந்து அமைந்துள்ளன.

முருகனுக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானையைப் போல, பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவிபோல இந்த நடுகற்களில் வீரனின் இருபுறமும் காட்டப்படும் அவனது மனைவியா் இருவரையும் ஒன்றுபோலவே காட்டியிருப்பது நடுகற்களில் புதுமையானதாகும். அதுவும் ஒரு நடுகல்லில் இரு பெண்களும் தங்கள் கைகளில் ஒன்றை பெண் தெய்வங்களைப் போன்று தொடை மீது வைத்துள்ளனா்.

ஆகவே சுமாா் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த செங்கல் நடுகல் கோயில்களும், அவற்றில் உள்ள நடுகல் சிற்பங்களும், தமிழக நடுகல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தமிழக தொல்லியல் ஆய்வு நிறுவனச் செயலரும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஆலோசகருமான அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியா் கோவிந்தராஜ் கூறினாா்.

ஆய்வின்போது இக்குழுவின் செயலா் தமிழ்ச்செல்வன், பாலாஜி மற்றும் அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் ஆய்வு

நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT