கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த பேருந்து-கன்டெய்னர் லாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மனதை உலுக்கியது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
முறையான விசாரணை நடத்தப்படும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை, சித்ரதுர்கா பேருந்து விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"சித்ரதுர்கா அருகே ஒரு கன்டெயன்ர் லாரி ஒன்று சொகுசு பேருந்து மீது மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் பலர் தீயில் கருகி உயிரிழந்த செய்தியைக் கேட்டு மனம் பதறிபோனேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவர்களின் பயணம் இப்படி சோகத்தில் முடிந்தது மிகவும் வேதனைக்குரியது," என்று சித்தராமையா கூறியுள்ளார்.
மேலும், "விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்கான காரணம் கண்டறியப்படும். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துயரத்திலும் பங்கெடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து வேதனை தெரிவித்துள்ள துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழக்கூடாது," என்று தெரிவித்துள்ளார்.
திரௌபதி முர்மு இரங்கல்
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.