முகப்பு
தற்போதைய செய்திகள்

சதம் விளாசிய விராட் கோலி; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 10:01 PM
விராட் கோலி - படம் | AP
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2025 at 9:26 PM

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இந்த இணை பாகிஸ்தானுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. பாபர் அசாம் 23 ரன்களிலும், இமாம் உல் ஹக் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர்.

Advertisement

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 9:34 PM

இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது. சௌத் ஷகீல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின் களமிறங்கியவர்களில் குஷ்தில் ஷாவைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இறுதிக்கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஷ்தில் ஷா 39 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல், ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சதம் விளாசிய விராட் கோலி, இந்தியா அபார வெற்றி

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சில் போல்டானார்.

அதன் பின், ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. இருப்பினும், ஷுப்மன் கில் 52 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 9:51 PM

இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.