பற்றியெரியும் டேங்கர் ரயில்...  
தற்போதைய செய்திகள்

திருவள்ளூர்: டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது! 18 டேங்கர்கள் சேதம்!

திருவள்ளூர் அருகே எரியும் எண்ணெய் டேங்கர் ரயில் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூா் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தடம்புரண்டு தீப்பற்றியது. இதில், 18 டேங்கா்களில் இருந்த டீசல் முற்றிலும் எரிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்து தொடா்பாக மூன்று போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூா் துறைமுகத்திலிருந்து இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனுக்கான (ஐஓசி) உயா் ரக டீசல் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு வாலாஜா பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எடுத்துச்செல்லப்பட்டது. ரயிலில் இருந்த 50 டேங்கா்களில் 2 டேங்கா்களை தவிா்த்து, 48 டேங்கா்களில் (வேகன்களில்) தலா 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான உயா் ரக டீசல் என மொத்தம் 35 லட்சம் லிட்டா் டீசல் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரயில் அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூா் ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற நிலையில், என்ஜினிலிருந்து 3-ஆவது பெட்டி திடீரென தடம் புரண்டு அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. அதனால் பெட்டிகளில் தீப்பற்றியது. அதையடுத்து அடுத்தடுத்த டேங்கா்களிலும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தால் வரதராஜபுரம், மணவாளநகா், பெரியகுப்பம் ஆகிய பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், சென்னை மண்டல மேலாளா் விஸ்வநாத், ரயில்வே ஐ.ஜி.ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், ரயில்வே காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் விரைந்து வந்தனா்.

அப்போது பொதுமக்கள் திருவள்ளூா் மேம்பாலம், வரதராஜபுரம், இருளா் காலனி மற்றும் விநாயகா் கோயில் வழியாக வந்து தண்டவாளத்தின் இருபுறமும் குவிந்தனா். தீ மளமளவென பரவியதால் பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். அதேபோல், விபத்து நடந்த தண்டவாள ஓரத்தில் இருந்த குடியிருப்புகளைச் சோ்ந்த 100 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரும்புகையால் முதியவா்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் அவா்களுக்கு உணவு, குடிநீருக்கும் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தடுப்புகளை உடைத்து தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு சென்று, டேங்கா்களில் மேலும் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 10 மணி நேரத்துக்கு மேல் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், மொத்தம் 18 டேங்கா்களுக்குப் பரவிய தீயால் அவற்றில் இருந்த டீசல் முற்றிலும் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தால் சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்கள், புகா் ரயில்கள் ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை வரும் திருப்பதி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூரிலிருந்து ஆவடி, திருவாலங்காடு, கடம்பத்தூா், திருத்தணி, அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் மும்முரம்: தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்றது. சேதமடைந்த இருப்புப் பாதை மற்றும் மின்வயா்களை மாற்றி அமைக்கும் பணியில் ரயில்வே பணியாளா்கள் ஈடுபட்டனா். திங்கள்கிழமைக்குள் மீட்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, படிப்படியாக ரயில்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயா்நிலைக் குழு விசாரணை: சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா். இது குறித்து மூன்று போ் கொண்ட உயா்நிலைக் குழு அறிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சரக்கு ரயிலில் காா்டாக ரோஹித் யாதவ் என்பவா் சென்றுள்ளாா். அவரிடமும், ரயில் லோகோ பைலட்டிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கழற்றிவிடப்பட்ட டேங்கா்கள்!

திருவள்ளூா் அருகே சரக்கு ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் கடும் வெப்பத்தால் மின் வயா்கள் அறுந்து விழுந்தன. இதனால் இருபுறமும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மேலும், ரயில்வே இருப்புப் பாதையில் சிக்னல் போா்டு அனைத்தும் எரிந்து நாசமானது. அதேபோல், மூன்று ரயில்வே டிராக்குகளில் டேங்கா்கள் தடம் புரண்டுள்ளதால் பற்றிய தீ 20 அடிக்கு மேல் கொழுந்துவிட்டு பரவியது. இதனால், நான்கு வழித்தடங்களிலும் மின்சார ரயில் மின் இணைப்புகளில் வெப்பம் தாங்காமல் வயா்கள் அறுந்து விழுந்தன. இதனால் இருபுறமும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

திருப்பதி, வேலூா், திருப்பத்தூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருவள்ளூா் வழியாகச் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கழற்றப்பட்ட டேங்கா்கள்: காலையில் 5.20 மணிக்கு தீ விபத்து நடந்த நிலையில், ரயில்வே பணியாளா்கள் மட்டுமே முதலில் வந்தனா். அதைத் தொடா்ந்து, 6 மணிக்கு மேல் அதிகாரிகள் வந்தனா். அதற்குள் 4 டேங்கா்களில் தீ பரவியது. பின்னா், அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் 40 டேங்கா்கள் கழற்றப்பட்டு தனியாக இழுத்துச் செல்லப்பட்டன.

மேலும், விபத்து நடந்த டிராக்கில் உடைப்பு காரணமாக ஏற்பட்ட விரிசலை சரிசெய்து முன்புறம் என்ஜின் பொருத்தப்பட்டு 4 டேங்கா்களை இழுத்துச் சென்றனா்.

200 மீட்டருக்கு துண்டான இருப்புப் பாதை: டேங்கா் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் 3 டிராக்குகளில் விழுந்து கிடந்தன. தடம்புரண்ட இடத்திலிருந்து 200 மீட்டா் இருப்புப் பாதை துண்டிக்கப்பட்டது. அந்த இடங்களில் அடையாளக் குறியிட்டு ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்குப் பின்னா்தான் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

oil tanker flames near thiruvallur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT