சென்னை: இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்) மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாணவர்கள் அசத்தல் முதல் 10 இடங்களில் ஒன்பது இடங்களை மாணவர்கள் கைப்பற்றினர்.
அதேபோல, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்கள் பிடித்த பட்டியலில் ஏழு இடங்களை மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.தனியாா் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டைபோலவே, நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்காக 72,743 போ் விண்ணப்பித்திருந்தனா்.
விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. விண்ணப்பப் பரிசீலனையின்போது, 20 மாணவா்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்) மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சிறப்பு ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டுக்கு 4281 விண்ணப்பங்கள் , விளையாட்டுப்பிரிவுக்கு 477 விண்ணப்பங்கள், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 642 விண்ணப்பங்கள், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 148 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுய நிதி மருத்துவக்கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 6,600, அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் மொத்த பல் மருத்துவ இடங்கள் 1583. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 42,315. அதில் ஏற்றுக்கொள்ள தகுதி படைத்த விண்ணப்பங்கள் என்கின்ற வகையில் 39,853. இதில் மாணவர்கள் 13,998, மாணவிகள் 25,855 பேர் விண்ணப்பித்தனர்.
மேலும் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 495. 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுய நிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மொத்த பல் மருத்துவ இடங்கள் 119. இந்த இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4281. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் 4,062. இதில் மாணவர்கள் 1136, மாணவிகள் 2,926.
நிர்வாக ஒதுக்கீடு விண்ணப்பங்கள்
2025-26 ஆம் ஆண்டிற்கான சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளுக்கான நிர்வாக ஒதுக்கீ்டை பொறுத்தவரை சுய நிதி மருத்துவக்கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 1144, சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ இடங்கள் 515. என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சுய நிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் 592, சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ இடங்கள் 15.
இந்த நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 33,692, அதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 30,428. மாணவர்கள் 9,737 மாணவிகள் 18,542.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பு:
மேலும், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி என்று 19 வகையான 4 ஆண்டுகள் பட்டப்படிப்புகளுக்கும் 6 ஆண்டு பி.பார்ம் மற்றும் 3 ஆண்டு டி.பார்ம் பட்டப்படிப்புகளுக்கும் செவிலியர் பட்டயப்படிப்புக்கும் 17.6.25 முதல் 7.7.25 வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் இடங்கள் 3,256, சுயநிதி கல்லூரிகளில் 20,026 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு உள்ளன. இந்த இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 61735. பிபார்ம்- டி 6 ஆண்டு சுயநிதிக் கல்லூரிகளில் 723 இடங்கள்,பிபார்ம்- டி 3 ஆண்டு பட்டப்படிப்புகளுக்கு 61 என்கின்ற வகையில் இடங்கள் உள்ளன. பிபார்ம்-டி 6 ஆண்டு பட்டப்படிப்புகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பம் 12,192, பிபார்ம் -டி 3 ஆண்டு பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29. செவிலியர் பட்டயப்படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2,080 இடங்கள் உள்ளன. செவிலியர் பட்டயப்படிப்புக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 16,746 என தெரிவித்தார்.
அதன் பின்னர் மாநில ஒதுக்கீடு இடங்கள் எம்பிபிஎஸ் இடங்கள் 6,600 மற்றும் பல் மருத்துவ இடங்கள் 1583 உள்ளன என்றும், அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்புக்கு 495 இடங்கள் உள்ளது. அதில் பல் மருத்துவம் 119 இடங்கள் உள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
சூர்யா நாராயணன் முதலிடம்
எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த சூர்யா நாராயணன் முதலிடம் பெற்றுள்ளார்.
திருமூர்த்தி முதலிடம்
அதேபோல், 7.5 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலில் முதலிடத்தில் கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர் திருமூர்த்தி முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவர்கள் அசத்தல்
எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாணவர்கள் அசத்தல் முதல் 10 இடங்களில் ஒன்பது இடங்களை மாணவர்கள் கைப்பற்றினர்.
அதேபோல, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்கள் பிடித்த பட்டியலில் ஏழு இடங்களை மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கிட்னி திருட்டு அல்ல கிட்னி முறைகேடு
நாமக்கல் கிட்னி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது மட்டும் அந்த பகுதியில் கிட்னி முறைகேடு சம்பவம் நடைபெறவில்லை 2019 ஆம் ஆண்டும் முறையீடு சம்பவம் நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனி்சாமி. ஆனால் தற்போது பிரசாரத்தில் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக பேசி வருகிறார். அங்கு நடைபெற்று இருப்பது கிட்னி திருட்டு அல்ல கிட்னி முறைகேடு சம்பவம்.
ஐஏஎஸ் தலைமையில் குழு விசாரணை
அந்த முறைகேடு சம்பவத்தையும் விசாரிக்க ஐஏஎஸ் தலைமையில் குழு விசாரணை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை தமிழக அரசுக்கு கிடைத்தது. அதனை அடிப்படையாக வைத்து தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் சித்தார் மருத்துவமனை மீது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது .
நலம் தரும் ஸ்டாலின் திட்டம்
வரும் 2 ஆம் தேதி நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார் . 1256 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மூன்று இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளி சதவீத சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.