சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைகளின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வினாடிக்கு 45,400 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, காலை 8 மணியளவில் வினாடிக்கு 60,400 கனஅடியாக அதிகரித்தது. மாலை 4 மணியளில் 75, 400 கனஅடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழுக்கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது.
நீர் திறப்பு அதிகரிப்பு
இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணையில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக் கூடும். 1 லட்சம் கனஅடி வரை திறந்து விடப்படலாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படும் நிலையில், இதற்கு தேவையான வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுக்க சம்பந்தப்பட்ட நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.