ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர்.
ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2020-21 வரையிலான காலத்தில் 339 பேரும், 2021-22 இல் 296 பேரும், 2022-23 இல் 306 பேரும், 2023-24 இல் 272 பேரும் மற்றும் 2024-25 இல் 205 பேரும் மின்னல் பாய்ந்து பலியானதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியாக மின்னல் பாய்ந்து பலியானவர்களில் மயூர்பஞ்ச் மாவட்டம் -134(பலி எண்ணிக்கை) முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக பாலாசோர்-110, கஞ்சம்-104 மற்றும் கியோஜார்-100 ஆகிய மாவட்டங்கள் உள்ளதென பலி எண்ணிக்கை பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் பௌத் மாவட்டம்-11 கடைசி இடத்திலுள்ளது.
இந்நிலையில், இயற்கையாகவே பனை மரங்கள் மின்னலைக் கடத்தி மக்களைக் காப்பாற்றக் கூடும் என்பதினால் 23 லட்சம் பனை மரங்களை ஒடிசா மாநிலம் முழுவதும் நடுவதற்காக வனத் துறைக்கு ரூ.7.59 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 51 வனப்பகுதி மண்டலங்களில் தற்போது 19 லட்சம் பனை மரங்கள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசு மின்னலை மாநிலத்தின் பேரிடராக அறிவித்திருந்தது.
மாநில பேரிடர் மீட்பு நிதி வழிகாட்டுதலின் படி மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.