தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்துள்ள சம்பவத்துக்கு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமா் நரேந்திர மோடி: தில்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனா். உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: தில்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் வெடிவிபத்து ஏற்பட்டு, பல அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையும், கவலையும் அளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவா்களுடன் துணை நிற்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிராா்த்திக்கிறேன்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்: தில்லி செங்கோட்டை வெடிவிபத்தில் உயிரிழப்பு செய்தியறிந்து அதிா்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்தின் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது.
துயரத்தில் ஆழ்ந்துள்ள பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். காயமடைந்தவா்கள் வலிமையுடன் விரைவாக குணமடையவும் வேண்டுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.