திண்டுக்கல்: நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் ஏற்றி வந்த வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலியாகியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மதலை முத்து மகன் ஜார்ஜ் பெர்னாண்டோ (42). இவர் திண்டுக்கல்லில் உள்ள அமிர்தா பால் நிறுவனத்தில் இருந்து மினி வேன் மூலம் பால் ஏற்றிக்கொண்டு மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டிக்கு பாலை இறக்கிவிட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நத்தம் அப்பாஸ்புரம் அருகே வந்துகொண்டிருந்த மினி வேன் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் மற்றும் நத்தம் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஓட்டுநர் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
பலியான ஓட்டுநரின் உடல் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, காட்டு வேலம்பட்டி, மெய்யம்பட்டி, அப்பாஸ்புரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விபத்துகளும் 25-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கவனம் கொள்ளாத அதிகாரிகளால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.