கரூர்: கரூர் சின்ன வடுகப்பட்டியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பவரின் வீட்டை சீல் வைப்பதற்கு வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 560 ஏக்கர் நிலங்களை அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடந்த 1962 ஆம் ஆண்டுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் பட்டா வாங்கி அவற்றில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தொண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அண்மையில் உத்தரவிட்டது.
மேலும், விரைவில் கோயில் நிலங்களை மீட்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெண்ணைமலை கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு இந்து அறநிலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது ஆண்டு குத்தகையோ செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு வாடகை அல்லது குத்தகையோ செலுத்தாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர்களின் வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வெண்ணமலை கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 7 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன் மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைக்கும் முயன்ற போது அந்த பகுதியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தொண்டர் சபை அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த வாரம் கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் எங்கெங்கு எந்த எந்த அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது, மின்வாரிய ஊழியா்கள் பூட்டியிருந்த வீடுகளுக்குள் சுவா் ஏறி குதித்து உள்ளே சென்று, மின் இணைப்பு விவரங்களை பதிவு செய்தனா்.
இதைகண்டித்து அப்பகுதி பெண்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினா் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் சீல் வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை காலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் வெண்ணைமலை கோயில் முன் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, வடக்கு நகரத்தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவைத்தலைவா் எஸ்.திருவிகா, திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் நன்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
இதையடுத்து போராட்டக்குழுவினா் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினா் சாா்பில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினா். தொடா்ந்து அப்பகுதியினா் கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதையடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைக்கும் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள சின்ன வடுகப்பட்டியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவரின் வீட்டுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்குரைஞர் நன்மாறன், மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.திருவிகா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. வழக்கு கீழமை நீதிமன்றத்தில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது வீடுகளுக்கு சீல் வைக்கவோ அல்லது பூட்டுகள் போடவோ மற்றும் மின் இணைப்பு துண்டிப்பதோ கூடாது. அவ்வாறு சீல் வைக்க அதிகாரிகள் முற்பட்டால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று பேசினர். தொடர்ந்து கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை தடுத்து போராட்டத்தை ஈடுபட்டு வரும் பொதுமக்களிடமும் அரசியல் கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் அவர்களை கைது செய்ய சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் கூட்டத்தை கலைக்க தீயணைப்புத் துறையினர் மூலம் தண்ணீரை பீச்சு அடிக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திலல் இரண்டு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் திடீரென மண்ணெண்ணை கேனுடன் வந்து தலையில் ஊற்றினர் இதனைக் கண்ட போலீசார் உடனே மண்ணெண்ணை கேன்களை பறித்து தீக்குளிப்பதை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர்கள் புகலூர் செல்வம், பிரேம்நாத் உள்ளிட்டவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தயாராக வைக்கப்பட்டிருந்த காவலர் வாகனங்களில் அவர்களை அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.