புது தில்லி: வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களில் 97 சதவீதம் பேர் நேரடி வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கல்வியையே விரும்புகிறார்கள். உலகளவில், 56 சதவீத மாணவர்கள் கல்வி குறித்து முடிவெடுக்கும்போது வேலைவாய்ப்புத் திறனை முடிவெடுக்கும் முதல் மூன்று காரணிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளனர்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், 97 சதவீத இந்திய மாணவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்கல்வியை விரும்புகிறார்கள் என்றும், வெளிநாட்டில் எங்கு படிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிநாட்டுப் படிப்பு அனுபவத்தின் ஒரு பகுதியாக நடைமுறை கற்றல், தொழில்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் நிஜ உலகத் திறன்கள் அவசியம் என்று நம்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் உள்ள தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் சிட்டி செயிண்ட் ஜார்ஜ்ஸின் ஆர்லிங்டன் ஆராய்ச்சி மையம் நடத்திய "வெளிநாட்டில் படிப்பதன் மதிப்பு" என்ற தலைப்பிலான ஆராய்ச்சியில், சர்வதேச உயர்கல்வியில் வருங்கால இந்திய மாணவர்களின் எதிர்பார்ப்பில் உயர்கல்வியின் மதிப்பு வகுப்பறை கற்றல் மற்றும் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் கண்டறிந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 3,000 பேரிடம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில் இந்திய மாணவர்களின் பதில்கள் தனித்து காணப்பட்டது. உயர்கல்வி படிப்பின் முதல் நாளிலிருந்தே அவர்களை செயல்முறை கற்றல் மற்றும் வேலைக்குத் தயார்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைத்து நாடுகளிலும் இந்திய மாணவர்கள் செயல்முறை கற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில்முறை சார்ந்த நடவடிக்கைகள் கல்வி அனுபவத்தின் முக்கிய பகுதிகளாக கருதுகிறார்கள்.
ஆய்வு அறிக்கையின்படி, 97 சதவீத இந்திய வருங்கால மாணவர்கள் வெளிநாட்டில் எங்கு படிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிநாட்டுப் படிப்பு அனுபவத்தின் ஒரு பகுதியாக நடைமுறை கற்றல், தொழில்துறை சார்ந்த படிப்புகள், பணி அனுபவம் மற்றும் நிஜ உலகத் திறன்களை வெளிப்படுத்துவது அவசியம் என்று கூறுகின்றனர்.
"சர்வதேச உயர்கல்வியிலிருந்து இந்திய மாணவர்கள் எதிர்பார்ப்பில் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் அது வகுப்பறை கற்றலுக்கு அப்பாற்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் தங்கள் அனுபவத்தின் முக்கிய பகுதிகளாக செயல்முறை கற்றல், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்முறை நடத்தைகளை முக்கிய பகுதிகளாக மதிப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று ஆய்வு கூறுகிறது.
உலகளவில், 56 சதவீத மாணவர்கள் கல்வி குறித்து முடிவெடுப்பதில் வேலைவாய்ப்பை முதல் மூன்று காரணிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளனர். இதில், சிறந்த முடிவெடுக்கும் காரணிகளுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமைப் பட்டியலைப் பார்க்கும்போது இந்திய மாணவர்களில் 87 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை கவனத்தில் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றலை நேரடியாக வேலைவாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் உயர்ந்துள்ளது.
கற்றலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அவசியம் என 60 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 56 சதவீதம் பேர் வேலைவாய்ப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட தொழில்முறை படிப்புகள், தொழில்நுட்பத் திறன்களை உருவாக்குவது மிக முக்கியமானது என கூறியுள்ளனர். 56 சதவீதம் பேர் தொழில்முறை நடத்தையை உருவாக்குவது கல்வியின் ஒரு முக்கிய பகுதி என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய மாணவர்களிடையே, பாடநெறி வடிவமைப்பு கற்றலை நேரடியாக வேலைவாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை காணப்படுவதுடன் பட்டப்படிப்புக்கு மட்டும் தயாராகாமல், வேலைவாய்ப்பு அளிக்க உதவும் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
எதிர்பார்ப்புகளில் மாற்றம்
சிட்டி செயிண்ட் ஜார்ஜ்ஸின் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் ஜெம்மா கென்யனின் கூற்றுப்படி, இந்திய மாணவர்கள் கல்வி எதை வழங்க வேண்டும் என்பதில் தங்களது முழுமையான கவனத்தை செலுத்துகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. மாணவர்கள் வெறும் அறிவை விட தொழிற்வாய்ப்பை வழங்கும் கல்வியைத் தேடுகிறார்கள். அவர்கள் உண்மையான தொழில் வெற்றிக்கு வழிவகுக்கும் திறன்கள், நம்பிக்கை மற்றும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் தொடர்புகளில்(நெட்வொர்க்) கவனம் செலுத்துகின்றனர்.
பல்கலைக்கழகங்கள் "கல்வி சிறப்பை நேரடி அனுபவம், பயிற்சிகள் மற்றும் தொழில்துறை வெளிப்பாடு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டங்களை வடிவமைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது," என்று கென்யன் கூறினார்.
உலகின் மிகப்பெரிய மாணவர் குழுக்களில் ஒன்றிலிருந்து அதிகரித்து வரும் இந்த தேவையைப் பூர்த்தி செய்ய உயர்கல்வி வழங்குநர்கள் திட்ட வடிவமைப்பு, பயிற்சிகள் மற்றும் தொழில் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.