இலங்கையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இலங்கையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளன.
கடந்த வாரம் இலங்கை கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. இதனிடயே, இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள "டிட்வா' புயலால் வடக்கு, வடக்கு மத்திய மாகாணங்கள் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
வியாழக்கிழமை நிலைமைகள் மோசமடைந்தன, வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகளை வெள்ளத்தில் மூழ்கின, மேலும் நாடு முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள மத்திய மலை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போய்விட்டனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் மழை, நிலச்சரிவால் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன, இதனால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில், சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களின் நடுவே பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதை அடுத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை வெள்ளம் சூழப்பட்ட ஒரு வீட்டின் கூரையில் சிக்கித் தவித்த மூன்று பேரை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அம்பாரா அருகே வெள்ளத்தில் ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்து மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.