2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கான அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையை, திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளின் கூட்டணி உத்திகளைப் பற்றி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பு குறித்து தினகரன் தெளிவுபடுத்தினார்.
2026 பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. விஜயின் தலைமையிலான கூட்டணியுடன் சேர்த்து 4 முனை போட்டி அமையும். எங்கள் தலைமையில் கூட்டணியா அல்லது வேறொரு கூட்டணியில் இணைவோமா என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் அழைப்பு வருவதாக தெரிகிறது. எதிர்பாராத வகையில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், அரசியல் களத்தில் புதிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தலுக்கு முன்னதாக, திமுக அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அது மட்டும்தான் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றினால் மட்டும்தான் தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியும் என்று தினகரன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.