திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை(அக்.27) நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழ் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாள்களில் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை நடைபெறுகிறது. கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடா்ந்து மற்ற பூஜைகளும் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறாா்.
இதையடுத்து, சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விரதம் மேற்கொண்டுள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. பக்தா்கள் கோயில் வளாகத்தில் பக்தி பாடல்களைப்பாடி வழிபட்டு வருகின்றனா். கோயில் கலையரங்கில் காலையும், மாலையும் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜாண் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 4,000 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.