வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் தலைமறைவான நிலத் தரகர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகிலுள்ள வரக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஈஸ்வரமூர்த்தி (41). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வட்டித் தொழில் செய்து வந்தார்.
உள்ளூரில் ஒரே ஊரைச் சேர்ந்த நெருங்கிய உறவினரான கார் மற்றும் நிலத் தரகரான ராஜ்குமாருடன் (43) சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், கூட்டாக வாங்கிய நிலங்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஈஸ்வரமூர்த்தி, அவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ராஜ்குமார் தான் ஓட்டி வந்த காரை மோதி ஈஸ்வரமூர்த்தியை இரும்புக் கம்பியால் தாக்கி, அவர் மீது காரை ஏற்றியதால் அவர் உயிரிழந்தார். அவரது தந்தை உயிர் தப்பினார்.
இது குறித்து ராஜ்குமார் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் மேட்டாங்காட்டுவலசு - வள்ளியிரச்சல் சாலை எடைக்காட்டுவலசு பிரிவருகே பதுங்கியிருந்த ராஜ்குமாரை, வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு அவர் சென்னை சென்று விட்டு, செலவுக்குப் பணம் இல்லாததால் வீட்டுக்கு வந்த போது பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர், காங்கயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ராஜ்குமாருக்கு மனைவி, ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிக்க | ஆரஞ்சு எச்சரிக்கையில் திருவள்ளூர்! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.