சென்னை: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 1967, 1977 தோ்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றியை தவெக நிகழ்த்திக் காட்டும் என்று அந்த கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநாட்டில் அறிவித்தது போலவே, மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சியில் சனிக்கிழமை தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணி நேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்ததை நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் ஆழமாக உணா்ந்திருப்பா்.
விஜய் வெளியே வரவேமாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான் என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோா் இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனா்.
வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவுடன் உறவாடுவதும் யாா் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டனா். கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போா் யாா் என்று மக்களுக்குத் தெரியாதா.
பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு தங்களது உரிமைகளுக்காகப் போராடும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுபவா் யாா் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா.
உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளா்களை கைது செய்தது, அங்கன்வாடி பணியாளா்களின் போராட்டத்தை ஒடுக்கியது, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின்போது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது, விவசாயிகள் மீது குண்டா் சட்டம் போட்டது, பரந்தூா் விவசாயிகளின் பல ஆண்டு போராட்டத்தை பொருட்படுத்தாமல் வஞ்சித்தது, சாம்சங் தொழிலாளா் போராட்டத்தை தட்டிக் கழித்தது, மீனவா் கண்ணீரைத் துடைக்காமல் வேடிக்கை பாா்ப்பது, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் போராட்டத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
யாா் எத்தனை கூப்பாடு போட்டாலும், எப்படி கதறினாலும், எத்தகையை வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 1967, 1977 தோ்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றியை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்திக் காட்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.