மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) மறைவு குறித்து...
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல் மருத்துவ ஆய்வுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை ஒப்படைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
சென்னை மாகாணத்தில் முதல்முறையாக 1922-ஆம் ஆண்டில் சென்னை விக்டோரியா போர்டு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியைத் தொடங்கியவரும், பள்ளி நிர்வாகத்தின் தயக்கத்தைப் போக்கி சிறுமிகளை பள்ளியில் சேர்த்தவருமான பள்ளியின் தலைமை ஆசிரியர் சருக்கை சீனிவாச அய்யங்காரின் மகனுமான ச.சீ. ராஜகோபாலன், தந்தையைப் போலவே கல்வித்துறை வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
1950 ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியராகபணியில் சேர்ந்து 1990-ல் ஓய்வுபெற்றார். ஆசிரியராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய அவர், ஆட்சியாளர்களுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர். சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தனது பங்களிப்பை செலுத்தியவர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பார்வை கொண்ட கருத்துகளுக்காக அறியப்பட்டவர்.
சிறந்த ஆசிரியர், கல்வியாளர், அவரது சமூகப் பார்வை இன்றைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
கல்வி தொடர்பான கட்டுரைகளை தினமணி நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர். நாளிதழ்களில் வாசகர் கடிதங்கள் இடையறாமல் தொடர்ந்து எழுதி அவற்றை அர்த்தமுள்ள கருத்து பரிமாற்ற மேடையாக்கியவர் ஐயா ராஜகோபாலன்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அவரது மறைவு கல்வித்துறைக்குப் ஒரு பேரிழப்பாகும்.