செய்திகள்

100 ஆண்டுகளானாலும் கழகம் தான் தமிழகத்தை ஆளும்!:  சசிகலாவின் கன்னிப் பேச்சு! 

வெகுஜனங்களைப் பொருத்தவரை மக்கள் நல நடவடிக்கையாக இவர் முன்னெடுக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து தான் இவருக்கான இடம் உறுதி செய்யப்படும். அதற்கான உத்திரவாதம் வெறும் பேச்சளவில் இருந்தால் போதாது.

கார்த்திகா வாசுதேவன்

அதிமுக பொதுச் செயலராக கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களால் ஒருமித்த உணர்வுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலா இன்று ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்து பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தலைமை அலுவலக வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கும் ஜெயலலிதா உருவப்படத்துக்கும்  மாலையிட்டு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்றுக் கொள்ளும் போது சசிகலாவின் தோற்றம்; 

ஜெ போலவே பச்சை நிறப் புடவை!
ஜெ போலவே  வட்டப் பொட்டில் ஐயங்கார் திருச்சூர்ணம்!
ஜெ போலவே ஏற்ற இறக்கமான அமர்த்தலான பேச்சு
நேற்று வரை இருந்த ஹேர் ஸ்டைல் இன்று காணோம். அதுவும் ஜெ வழியில் கிளிப் போடப்பட்ட சிறு கொண்டையுடன் அசத்தலாக ஜெ வை நகலெடுத்தவராக இருக்கிறார் சசி!

சசிகலாவின் கண்ணீர் மல்கும் கன்னிப் பேச்சிலிருந்து சில பகுதிகள் இங்கே...

  • அம்மாவை ஒரு சில சந்தர்பங்களில் பார்த்தவர்கள், ஒரு சில சமயங்களில் அவருடன் பழகியவர்களுக்கே அவரை மறக்க முடியாத அளவுக்கு ஆளுமை மிக்கவர் அம்மா, நான் எனது 29 வயது முதல் அம்மாவுடன் தான் இருக்கிறேன். அவரது கம்பீரமான பேச்சு காதில் விழாத தருணங்கள் மிகக் குறைவு...
  • அம்மாவுக்கோ இயக்கம் தான் வாழ்க்கை, எனக்கோ அம்மா தான் வாழ்க்கை. அவரை இழந்து செய்வதறியாது வேதனையில் வாடுகிறேன். 
  • ஆயிரமாயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன், அம்மா இல்லாமல் நான் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது. 
  • அம்மா இல்லாத அரசியல் களம் எனக்கு தேவதை இல்லாத அரசியல் மாடமாகக் காட்சியளிக்கிறது...
  • புரட்சித் தலைவி அவர்களின் லட்சியக் கனவுகளை நிறைவேற்றுவதே நமது தலையாய கடமை. 
  • எனக்கு இப்போது 62 வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கப் போகிறேனோ அது வரை, அம்மா வழியில் நம்மை விமரிசித்தவர்கள் கூட மனமுவந்து நம்மை பின்பற்றும் பொதுவாழ்வை மேற்கொள்வோம்.
  • ஒன்றரை கோடி பிள்ளைகளை உன்னை நம்பி ஒப்படைத்திருக்கிறேன் என்று அம்மாவின் ஆன்மா என்னிடம் சொன்னதாக உணர்கிறேன். 
  • வழக்கம் போலவே புரட்சித் தலைவி அம்மா இருக்கும் போது எப்படி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுமோ அதே வகையில் 2017 ஜனவரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடவும், புரட்சித் தலைவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்...
  • நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அம்மா வழியில் பின்பற்றுவோம்!
  • இப்போது மட்டுமல்ல இன்னும் 100 ஆண்டுகளானாலும் புரட்சித் தலைவி அம்மா வழியில் கழகம் தான் தமிழகத்தை ஆளும்...
  • தந்தை பெரியாரின் தன்மானம், அறிஞர் அண்ணாவின் இன மானம், புரட்சித் தலைவரின் கனிவு, புரட்சித் தலைவியின் துணிச்சல் இவை அனைத்தையும் பின்பற்றி கழகத்தை வழிநடத்துவோம்... அதற்கான எனது பணிகளுக்கு கட்சியினர் அனைவரது ஒத்துழைப்பும், இறைவனின் ஆசியும் எனக்கு கிடைக்க வேண்டும். 

என்பதாக இருந்தது திருமதி. சசிகலாவின் பேச்சு.

கடந்த 33 ஆண்டுகளாக அவர் ஜெ வுடன் இருந்தாலும். முதல்முறையாக இப்போது தான் பொது வாழ்வில் நேரடியாக கட்சியினர் முன்பாக ஒரு உரையை நிகழ்த்தி இருக்கிறார். மிக உருக்கமாகவும், கண்ணீர் மல்கும் விதமாகவும் இருந்த இந்த உரையளவில் தமிழக அரசியலில் தனக்கான இடத்தை வெகு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 

வெகுஜனங்களைப் பொருத்தவரை மக்கள் நல நடவடிக்கையாக இவர் முன்னெடுக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து தான் இவருக்கான இடம் உறுதி செய்யப்படும். அதற்கான உத்திரவாதம் வெறும் பேச்சளவில் இருந்தால் போதாது. இதை அவரும் வெகு நன்றாகவே அறிந்திருக்கக் கூடும். என்ன செய்யவிருக்கிறார் சசிகலா? அடுத்து வரும் நாட்களில் காண முடியலாம். அதுவரை ஜெவின் நகலாக இருக்க முற்படும் முயற்சியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT