செய்திகள்

கிருஷ்ணருக்கு 8 மனைவிகள் இருந்தும் கோகுலாஷ்டமியன்று ராதையை மட்டுமே நினைவு கூர்வது ஏன்?

கார்த்திகா வாசுதேவன்

நேற்று என் மகள்களது பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 14 ஆம் தேதி விடுமுறையில்லையா? அதனால் பள்ளிகளில் மட்டும் எப்போதுமே முன்னதாகக் கொண்டாடி முடித்து விடுவார்கள். பள்ளியின் மைதானத்தில் ஆர்ட் டீச்சர்களின் கை வண்ணத்தில், நீலக் கண்ணன் வெண்ணெய் குடங்களின் நடுவே அமர்ந்து வெண்ணெய் உருண்டைகளை ஆசை தீர விழுங்கிக் கொண்டிருப்பதைப் போல அழகான பெரிய ரங்கோலியொன்று இடப்பட்டிருந்தது.

அதோடு பள்ளியின்  நீண்ட மைதானமெங்கும், அந்தக் காலை நேரத்தை ரம்மியமாக்கிக் கொண்டு ஏராளமான குட்டிக் கிருஷ்ணர்களும், சுட்டி ராதைகளுமாக அந்தப் பகுதியே ஒரே வண்ணமயமாக இருந்தது. மூக்கில் புல்லாக்கு மாட்டிய ராதை, இடுப்பில் குடத்தை ஏந்திய ராதை, புல்லாங்குழலால் குட்டிக் கண்ணனை அடிக்க ஓடிக் கொண்டிருந்த ராதை, பள்ளியில் பிரசாதமாகத் தரப்பட்ட கேசரி கையிடுக்கில் வலிய அதை சிற்றாடையில் ஈசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த ராதை, ‘மிஸ்... கோபி என்னைக் கிள்றான்... அதனால நானும் அவனைக் கிள்ளிட்டேன் என்று குறும்புக்குப் பின் தானே முன் வந்து சமர்த்தாகச் சரண்டராகும் பாலகிருஷ்ணன், ஐஸ்கிரீமும், சாக்லேட்டுகளுமாகத் தின்றதால் சளி அதிகமாகி ஒழுகும் மூக்கை பட்டுக் கெளபீனத்தால் துடைத்ததால் சரிகை குத்தி எரிச்சலில் மூக்குச் சிவந்து கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்த சுருள் முடி நவநீதக் கண்ணன்... ஐயோடா அங்கே தான் இன்னும் சொல்லச் சொல்லத் தீராமல் நீண்டு கொண்டே இருக்கிறார்களே கிருஷ்ணர்களும், ராதைகளும். யாரை விட? யாரைச் சேர்க்க?!

இங்கே ஒரு விஷயம் மிக அழுத்தமாக கவனத்தை ஈர்த்தது. இதற்கு முந்தைய வருடங்களில் எல்லாம் இந்தளவுக்கு இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசனைகள் வந்ததில்லை. ஆனால் பள்ளி மைதானத்தில் இந்தாண்டு கண்ட எக்கச்சக்க பால கிருஷ்ணர்களும், சுட்டிக் குட்டி ராதைகளுமாகச் சேர்ந்து என்னை இப்படியொரு யோசனைக்கிணற்றில் பிடித்து வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டார்கள். 

சரி இனி விஷயத்துக்கு வருவோம். கிருஷ்ணருக்கு மகாபாரதம் மற்றும் பாகவத புராணக் கதைகளின் அடிப்படையில் 8 மனைவிகள் இருந்தனர். அவர்கள் முறையே;

ருக்மிணி
சத்யபாமா
ஜாம்பவதி,
காளிந்தி
மித்ரவிந்தா
நக்னஜித்
பத்ரா
லக்‌ஷ்மணா

இந்த அஷ்ட பார்யாக்களைத் தவிர... மகதத்தில் ஜராசந்த வதத்தின் பின் அவனால் கொல்லப்பட்ட 1000 சத்ரிய அரசர்களின் விதவைகளுக்கும் கிருஷ்ணர் தான் வாழ்க்கை கொடுத்தார் என்று கூட ஒருகதையில் வருகிறது. இந்தக் கணக்கெல்லாம் தாண்டி கிருஷ்ணருக்கு அஷ்டபார்யாக்களைத் தாண்டி மொத்தம் 16,000 மனைவிகள் இருந்தார்கள் என்றொரு கதையும் கூட உண்டு. அது நிஜமா? கறபனையா என்று தெரியவில்லை.

ஆனால் விஷ்ணுபுராணம் மற்றும் ஹரிவம்சக் கதைகளின் அடிப்படையில் பார்த்தால் அஷ்டபார்யாக்களில் பத்ராவின் பெயர் சில இடங்களில் ரோஹினி அல்லது மாத்ரி என்றும் மாற்றிக் குறிப்பிடப்படுவது உண்டு என்றாலும் இதிகாசப்படியும், புராணப்படியும் கிருஷ்ணருக்கு 8 மனைவிகள் இருந்தார்கள் என்பது ஊர்ஜிதமான விஷயமே!

மேற்கண்ட 8 மனைவிகளுமே மகாபாரத காலத்தில் வலிமையான அல்லது வலிமையிழந்திருந்த குட்டி, குட்டிப் பிரதேசங்களின் இளவரசிகளாக இருந்து தான் கிருஷ்ணரை மணந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 பேர்களிலும் கிருஷ்ணருடன் இணைந்து இப்போதும் வணங்கப் பெறும் பெரும் பேறு பெற்றவர்கள் இருவரே; அவர்கள் ருக்மிணியும், சத்யபாமாவும் மட்டும் தான். இவர்களைத் தான் நாம் ஸ்ரீதேவி, பூதேவியாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணரின் பிற மனைவிகளில் காளிந்தி மட்டுமே யமுனை எனும் நதி வடிவில் தனியாக வணக்கத்துக்கு உரியவளாகிறாள். ஆனால் பிற ஐந்து மனைவிகளுக்குமே வணங்கப்படும் அந்த வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. ஆனால் மனைவி எனும் அங்கீகாரம் இல்லாமலிருந்த போதும் ராதைக்கு கிருஷ்ணரது வாழ்க்கையில் கிடைத்திருக்கும் இடம் மிகப்பெரிது. அவரது மனைவிகளைப் பற்றிக் கூட கோகுலாஷ்டமியன்று நம் மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இந்தியா முழுதும் எங்கே பார்த்தாலும் கோகுலாஷ்டமியன்று மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடி மகிழ்வது கோபியர் கொஞ்சும் ரமணனையும் அவனது தீராக்காதலி ராதையையும் தான்.

ஏன் ராதைக்கு அப்படியென்ன முக்கியத்துவம் என்கிறீர்களா?

அது ஒரு அற்புதமான உறவு நிலை. குழந்தை கண்ணனைக் கொல்ல ஹம்ஸனால் அனுப்பப் படும் தீய சக்திகளில் இருந்து அவனைக்காக்க... அவனுக்கு முன்பே ஆயர்குலத்தில் பிறந்து அவன் வரவுக்காக காத்திருக்கும் காவல் தேவதையாக ராதை இந்தியாவின் பிற பகுதிகளில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வரும் சில மகாபாரதக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் ஞாயிறு காலைகளில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வழியாக நாமறிந்த யாஷ் சோப்ரா, மகாபாரதக் கதையின் படி... அவள் கோகுலத்தில் கண்ணனின் விளையாட்டுத்தோழி, அவனை விட வயதில் மூத்தவளும் கூட. ஆனால் சகோதரி அல்ல. கோகுலத்தில் இயற்கையும், பகைவர்களும் இடையூறாக இருந்ததால் ஆயர் குலத்தலைவரான நந்தகோபன் தன் மக்களைத் திரட்டிக் கொண்டு பிருந்தாவனத்துக்கு இடம் பெயர்ந்து விடுகிறார். பிருந்தாவனம் வந்த பிறகு கண்ணன், தன் இணை பிரியா களித்தோழியான ராதையுடன் அதிக நாட்கள் செலவளிக்க முடிந்ததில்லை. கூடிய விரைவிலேயே அவர் மதுராவுக்கு ஹம்ஸ வதத்திற்குச் செல்ல வேண்டியதாகி விடுகிறது. இதிகாசப்படி ஆத்மார்த்தமான ராதா, கிருஷ்ண நேசம் அத்துடன் முடிவடைந்து விடுகிறது. ராதையும் வேறொரு இடத்தில் மணம் முடிக்கப் படுவதாகத் தான் கதைகளின் பிற்சேர்க்கைகள் விவரிக்கின்றன. ஆனால் அவளுக்கு மணமான பின்னும் அவள் நினைவெல்லாம் ராஜஸ்தானின் மீராபாயைப் போல, தமிழகத்தின் ஆண்டாளைப் போல, ஆந்திராவின் வெங்கமாம்பாளைப் போல பிருந்தாவனக் கண்ணனின் மீதே இருந்திருக்கிறது. மணமான பெண்ணொருத்தி தனது பால்யத்தோழனின் நினைவிலேயே இருந்தால் இந்த உலகம் என்ன சொல்லி இகழும்? அவளையும் அவ்விதமாகவே இகழத் தொடங்குகிறது. ஆனாலும் முடிவில் வேய்ங்குழலின் தீஞ்சுவையில் அவள் கண்ணன் நினைவிலேயே இவ்வுலக வாழ்வை நீத்து விடுகிறாள். மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கே இறப்பு நிர்ணயிக்கப் பட்டிருந்தது என்றால் ராதையும் மதுராவை ஒட்டி எங்கோ ஒரு ஆயர்குடிக்கிராமத்தில் இயற்கை எய்தியிருக்க வேண்டும். அங்கே அவளுக்கொரு கோயிலும் இருக்கலாம். ஆனால் கிருஷ்ண பக்தர்களைப் பொறுத்தவரை, வைஷ்ணவ வழிபாட்டு முறையைப் பொறுத்தவரை ராதைக்கு இறப்பில்லை. அவள் என்றென்றைக்குமாக கண்ணனது மனதில் மட்டுமல்ல அவனது பக்தர்களின் நெஞ்சங்களிலும் நீங்காது இடம் பெற்று விட்டாள். அதன் வெளிப்பாடு தான் ஆண்டு தோறும் பள்ளி மைதானங்களை  பிருந்தாவனமாக்கித் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் குட்டிக் குட்டி ராதா கிருஷ்ண ரூபங்களின் தரிசனம்!

ராதே நீ ஆண்டுகள் தவறாமல் உன் மாயக்கண்ணனோடும், அவனது மூன்றாவது கரமான வேய்ங்குழல் நாதத்தோடும், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களோடும் வாழிய பல்லாண்டு!

Image courtesy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT