செய்திகள்

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!

RKV

கடற்கரையோரங்களில் அடிக்கடி நிகழும் செல்ஃபீ விபத்துகளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நோ செல்ஃபீ பாயிண்டுகளை அதிகப்படுத்தியிருக்கிறது கோவா மாநில அரசு. 

கோவா கடற்கரைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் கணிசமானோர் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தில் கடற்கரையின் ஆபத்தான பாறையுச்சிகள் மற்றும் அலையின் வேகம் தீவிரமாக உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கூட்டமாக செல்ஃபீ எடுத்து கால் வழுக்கியோ அல்லது அலையால் இழுத்துச் செல்லப்பட்டோ, கடலில் தவறி விழுந்தோ ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரை சடலங்களாகத்தான் மீட்கப்பட முடிகிறது. எனவே இந்த அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு கோவா கடற்கரை பகுதியில் மேலும் பல இடங்களை நோ செல்ஃபீ பாயிண்டுக்களாக அதிகாரப்பூர்வமான வகையில் அறிவித்துள்ளது கோவா மாநில அரசின் கடற்கரை கட்டுப்பாட்டு அமைச்சகம்.

மாநில அரசின் அறிவுறுத்தலின் படி கோவா கடற்கரைப் பகுதியில் தற்போது 24 இடங்கள் நோ செல்ஃபீ ஜோன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கோவாவில் இருக்கும் பாகா ரிவர், டோனா பாலா ஜெட்லி, சிங்கூரியம் ஃபோர்ட், அஞ்சுனா, வகடார், மோர்ஜிம், ஆஷ்வெம், அரம்பால், கெரிம் மற்றும் போம்போலிம் & சிரிடாவோவுக்கு இடைப்பட்ட இடங்கள், தெற்கு கோவாவில் அகோண்டா, போக்மலோ, ஹோலண்ட், பாய்னா, ஜாப்பனிஸ் கார்டன், பீடல், கனகுயீனம், பாலொலெம், ஹோலா, கபோ டி ரம, போலெம், கல்கிபாக், தல்போனா மற்றூம் ராஜ்பாக் உள்ளிட்ட இடங்கள் நோ செல்ஃபீ ஜோன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்கு புலப்படும் விதத்தில் எச்சரிக்கை கொடிகள் மற்றும் ஷைன் போர்டு உத்தி முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என மாநில அரசு சார்பாக நியமிக்கப்பட்டுள்ள திருஷ்டி மெரைன் எனும் தனியார் மெய்க்காப்பாளர் ஏஜென்ஸி அமைப்பின் சி இ ஒ ரவி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை அறிவுறுத்த டால் ஃப்ரீ எண் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 17 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவா கடற்கரையின் வெவ்வேறு இடங்களில் தங்களது செல்ஃபீ மோகத்தால் உயிரிழந்ததைத் தொடர்ந்து கோவா சுற்றுலாத்துறை அமைச்சகம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் ரவி ஷங்கர் தெரிவித்துள்ளார். 

ஆண்டு தோறும் 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகத் திகழும் கோவா கடற்கரையை விபத்து மற்றும் உயிரிழப்புகள் அற்ற இடமாக மாற்றுவதே இந்த அறிவிப்பின் நோக்கமென கோவா சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT