'பொது முடக்கத்தால் அதிகரிக்கும் மனநலப் பிரச்னைகள்'
பொது முடக்க காலத்தில் கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது.
பொது முடக்க காலத்தில் கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல நாடுகளில் பாதிப்பு குறைந்தபாடில்லை. சுமார் 6 மாத காலமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தற்போது பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்கின்றனர். கரோனா தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது பல்வேறு மனநலப் பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வில், ஒரு நாட்டின் சூழ்நிலையியலைப் பொருத்து மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. சைக்கோசோமேடிக் மெடிசின் இதழில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடந்த ஏப்ரல் மாதம், பொதுமுடக்க தொடக்கத்தில் இருந்து மக்களின் மனச்சோர்வு, கவலை, பதட்டம் குறித்து ஆய்வு செய்தனர். பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்தில் இது 17 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 52 சதவீதமாக மாறியுள்ளது. பொதுமுடக்க காலத்தில் மட்டும் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இளம் வயதினர், பெண்கள் மற்றும் வேலையில்லாதவர்கள், குறைந்த வருமானத்தில் இருப்பவர்கள் ஆகியோரிடம் மனச்சோர்வு அதிகம் காணப்பட்டுள்ளது.
'இந்த ஆய்வின் மூலமாக உலக மக்களின் மன ஆரோக்கியம் தொடர்பான அவசர பிரச்னையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்' என ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரும், ரோதர்ஹாம் டான்காஸ்டர் மற்றும் சவுத் ஹம்பர் என்.எச்.எஸ். அறக்கட்டளையின் உளவியல் ஆராய்ச்சி இயக்குநருமான டாக்டர் ஜெய்ம் டெல்கடிலோ தெரிவித்தார்.
மேலும், 'வரலாற்று ரீதியாக, மனநலப் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. ஒரு நோய் பாதிப்பை விட மனநலப் பிரச்னைகள் மிகவும் மோசமான சுகாதார சீர்கேடு நிலைமை ஆகும். அவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ஆய்வின் முடிவுகள் இந்த சவாலான நேரத்தில், மக்களின் சுகாதாரத்தோடு, அவர்களின் மன ஆரோக்கியத்திலும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது' என்றார்.
அதேபோன்று, கரோனா ஒரு மனநல சுகாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதற்கு இந்த ஆய்வு ஒருசான்று என ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியல் பேராசிரியர் மைக்கேல் பார்காம் கூறுகிறார்.
ஆஸ்திரியாவின் டோனாவ்-யுனிவர்சிட்டட் கிரெம்ஸின் தலைமை ஆய்வாளர் டாக்டர் கிறிஸ்டோஃப் பெய், 'கரோனா வைரஸ் ஒரு புதிய நோய் மற்றும் பொதுமுடக்கம் என்பதும் நம் சமீபத்திய தலைமுறைகள் கண்டிராத ஒன்று என்பதால் கரோனா தொற்று நோயால் ஏற்படும் மனநல பாதிப்புகள் பெரும்பாலும் வெளியில் தெரியப்படுத்தப்படவில்லை' என்றார்.
எனவே, கரோனா தொற்றினால் உடல் நலத்தோடு, மனநலத்தையும் பேண வேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.