முதுமையில் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் பார்கின்சன். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11ம் தேதி உலக பார்கின்சன் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படும் இந்த பார்கின்சன் நோய் தாக்கத்தை, மிகச் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பார்கின்சன் நோய் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோயாகும். இது மூளையில் உள்ள "டோபமைன்" எனும் ரசாயனக் குறைபாட்டால் ஏற்படுகிறது. உடலில் தசை இயக்கங்கள் சிறிது சிறிதாக பாதிப்படைய செய்கிறது.
இந்த நோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்றால் அது நடுக்கம்தான். கை, கால்களில் ஏற்படும் நடுக்கம் பார்கின்சன் நோயை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறியாகும். ஆரம்பத்தில் மிகவும் லேசாக இருக்கும் நடுக்கம், சிலருக்கு ஒரு சில மாதங்களில் தீவிரமாகிவிட நேரிடுகிறது. கை, கால்களில் ஒருபக்க இயக்கமும், அசைவும் குறைகிறது. நாள்பட இதுவே, நடக்கவோ, கைகுலுக்கவோ சிரமமாகிவிடும். இதை பார்கின்சன் நோயின் தீவிரமாகக் கருதலாம்.
சில வேளைகளில் மற்றவர்களிடம் பேசும் போதும், கையெழுத்துப் போடும்போதும் ஒருவித நடுக்கம் ஏற்பட்டு சிரமத்தை ஏற்படுத்தும். வாசனை அறிதல் மட்டுப்படும், மணிக்கணக்கில் எந்தவித அசைவுமின்றி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பார்கள். உணவை எடுத்துக்கொள்ள சிரமப்படுவார்கள். உடல் எடை நாளுக்கு நாள் குறையும். மனச்சோர்வு, மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்படும்.
பார்கின்சன் நோய் ஏற்பட்டவர்களுக்கு நாளடைவில் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். ஏனெனில் உடலில் குறையும் ஊட்டச்சத்தால் உடல் நடுக்கம் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே சீரான உணவை உட்கொள்வது அவசியம்.
இந்த நோய் வராமல் இருக்க உணவுப்பொருள்கள் இல்லையென்றாலும், இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த மருத்துவரின் ஆலோசனையின்படி உணவை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக இந்த நோய்க்கு பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகள், வைட்டமீன்கள் ஏ,பி,சி மற்றும் ஈ நிறைந்த உணவினை எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக லைகோபீன், பீட்டா கரோட்டினாய்டுகள், ரைபோஃப்ளேவின் நிறைந்த தக்காளி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்று உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
பார்கின்சன் நோய் பாதிக்கப்பட்டவர்கள் பால் பொருள்களை அதிகமாக உட்கொள்வது மூலையில் உருவாகும் சீரம் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதற்கு வழிவகுக்கும். எனவே பால் பொருள்களைத் தவிர்க்கலாம்.
இந்த நோயின் பொதுவான பிரச்னை மலச்சிக்கல். அதைத் தடுக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும், சிறுதானிய உணவுகளையும், புரதம் மிகுந்த உணவைகளையும் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு ஒரு பழமும், காயும் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.