உலகளவில் அதிகரித்து வரும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். மார்பகம், இரைப்பை, கல்லீரல், கருப்பை என உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டிகள் தோன்றி புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோய் கட்டிகள் தோன்றுவதற்கான காரணம் முழுமையாக இன்றும் கண்டறியப்படவில்லை எனினும் இதனைத் தடுப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நமது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும். இது காலப்போக்கில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதர நோய்களின் பாதிப்பில் இருந்தும் காக்கவும் உதவும் என்று கூறுகின்றனர்.
1. உணவு
காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வைட்டமின், தாதுக்கள், நோயெதிர்ப்பு பொருள்கள் அதிகம் உள்ளது.
மன அழுத்தம், நோயெதிர்ப்பு சக்தி குறைவு இந்த இரண்டும் புற்றுநோய் ஏற்பட பெரும்பாலும் காரணமாகின்றன.
எனவே நாள் ஒன்றுக்கு 5 காய்கறி அல்லது பழங்களை உணவில் சேர்ப்பது நுரையீரல், வாய், தொண்டை, வயிறு பகுதிகளை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று அமெரிக்க புற்றுநோய் சங்கம் கூறியுள்ளது.
2. உடற்பயிற்சி
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உடற்பயிற்சி அவசியமானது.
இது ஹார்மோன்களின் சமநிலை, சரியான எடையைப் பராமரிக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
மார்பகம், பெருங்குடல், கருப்பை வாய் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க, ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள்(இரண்டரை மணி நேரம்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தேசிய புற்றுநோய் நிறுவனம் பரிந்துரைக்கிறது.
3. ஆல்கஹால்
ஆல்கஹால் அதிகம் உட்கொள்வது கல்லீரல், மார்பகம், உணவுக்குழாய் உள்பட பல வகையான புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது.
இது டிஎன்ஏவை சேதப்படுத்துகிறது, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கிறது, இவை இரண்டும் நிகழும்போது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
நாள் ஒன்றுக்கு பெண்கள் ஒரு பெக்(30 மிலி), ஆண்கள் 2 பெக்(60 மிலி)-க்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவின் புற்றுநோய் நிறுவன ஆய்வு கூறுகிறது.
4. புகைப்பிடித்தல்
புகையிலை பயன்பாடு உலகளவில் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் காரணமாக இருக்கிறது.
அதிலும் ஒருவர் புகைப்பிடித்த சிகரெட்டை மற்றொருவர் புகைக்கும்போது இரண்டாம் நபருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க, புகைபிடிப்பதை கைவிட வேண்டும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.
5. உடல் பரிசோதனை
வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் நோயின் தொடக்கத்திலேயே கண்டறிதல் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும்.
மேமோகிராம்கள், பேப் ஸ்மியர்ஸ், கொலோனோஸ்கோபி போன்ற வழக்கமான பரிசோதனை, மார்பகம், கருப்பை வாய், பெருங்குடல் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
6. சூரிய ஒளி
தோல் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும், ஆனால் இது தடுக்கக்கூடியது.
சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே, தோல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க, சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும், அதிக வெப்பநிலையில் இருந்து உடலை பாதுகாக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.