உங்கள் உடலில் அதிகமாக சேரும் கொழுப்புதான் படிந்து பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிறது. அது வயிற்றுப் பகுதியில் அதிகமாகப் படியும்போது தொப்பை ஏற்படுகிறது.
உடலில் கொழுப்பு படிவதனால் இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு உடல் எடை குறைவாக இருந்தாலும் உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும். இத்தனையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
உங்கள் உடலில் 'ஸ்கின்னி ஃபேட்' என்று சொல்லக்கூடிய உள்ளுறுப்பு கொழுப்பு, உடலின் மொத்த கொழுப்பு எடையில் சுமார் 10% இருந்தால், அது இயல்பானது, ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. அதற்கு மேலாக இருந்தால் கண்டிப்பாக அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, பொதுவாக, பெண்களுக்கு இடுப்புப் பகுதி(waist) 35 அங்குலத்திற்கும் ஆண்களுக்கு 40 அங்குலத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டியது என்று கூறுகிறது. வயிற்றில் சேரும் கொழுப்புதான் மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரிக்கப்படுகிறது.
உடல் எடை அதிகரிக்கும்பட்சத்தில் அல்லது உடலில் பிரச்னைகள் ஏற்படும்பட்சத்தில் உடலில் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்வது விளைவுகளைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும்பட்சத்தில் அதனைக் குறைக்க அல்லது தொப்பையைக் குறைக்க சில பழக்கவழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இரவு உணவு
இரவு நேரத்தில் மிகவும் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் சில மணி நேரங்கள் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் படுப்பது உடலில் இன்சுலின், கார்டிசோல், குளுக்கோஸ் போன்ற ஹார்மோன்களைப் பாதிக்கிறது. உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கிறது.
உடற்பயிற்சி
தினமும் எளிதான உடற்பயிற்சியாவது அவசியம். போனில் பேசும்போது நடப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்றவற்றை தினசரி வேலைகளுக்கு இடையே செய்யலாம்.
தூக்கம் அவசியம்
நீங்கள் சரியான உணவு சாப்பிட்டு தேவையான அளவு உடற்பயிற்சி செய்தாலும் தூக்கம் இல்லை என்றால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவார் உடலில் கொழுப்பை அதிகரிக்கும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்யுங்கள். தூங்குவதற்கு முன்பாக செல்போன், டிவி போன்ற சாதனங்களைப் பார்க்க வேண்டாம்.
வலிமைக்கான பயிற்சி
உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி உடல் வலிமை பெற 'டம்பிள்ஸ்' போன்ற சாதனங்களின் உதவியுடன் உடல் வலிமைக்கான ஸ்குவாட், லஞ்சஸ் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
உணவுகள்
கார்போஹைடிரேட் உணவுகளைக் குறைத்து கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் சமையல் எண்ணெய்களை மாற்றுங்கள். ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துங்கள்.
அதேபோல சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள், டீ, காபியை குறைத்துக்கொள்ளுங்கள், உணவில் உப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.