பால் ஐஸ்கிரீம்
தேவையான பொருள்கள்:
பால் - 1 லிட்டர்
ஓரம் நீக்கிய பிரட் துண்டுகள் - 2
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
பாதாம், முந்திரி - தலா 10
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
செய்முறை: ஒரு லிட்டர் பாலில், முக்கால் பாகத்தை அடுப்பில் வைத்துச் சுண்டக் காய்ச்சவும். ஓரம் நீக்கிய பிரட் துண்டுகள், சோள மாவு இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். மீதமுள்ள பாலில் அரைத்த கலவையைப் போட்டு, பாதாம், முந்திரித் துண்டுகள் மற்றும் சர்க்கரை போடவும். இந்தக் கலவையைச் சுண்டிய பாலில் போட்டு நன்கு கிளறி, அல்வா பதத்தில் எடுத்து, ஆறியதும் குல்ஃபி அச்சுகளில் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும்.
கேரட் ஐஸ்கிரீம்
தேவையான பொருள்கள்:
கேரட் - 4
பாதாம், முந்திரி - தலா 10
சர்க்கரை - 1 கிண்ணம்
பால் - 1/2 லிட்டர்
வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப
செய்முறை: நான்கு கேரட்டுகளைத் தோல் சீவி, ஆவியில் வேகவிடவும். ஆறியவுடன் பாதாம், முந்திரி தலா 10, சர்க்கரையைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரை லிட்டர் பாலை கால் லிட்டராகக் காய்ச்சி, அரைத்த விழுதைச் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். ஆறியவுடன் இரண்டு சொட்டு வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கி ஃப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும்.
மேங்கோ ஐஸ்கிரீம்
தேவையான பொருள்கள்:
மாம்பழம் - 5
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கிண்ணம்
சோள மாவு - 1/4 கிண்ணம்
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாகக் காய்ச்சவும். பிறகு சோள மாவை தனியாக ஆறிய பாலில் கலந்து கரைத்து அதனுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கெட்டியாக மாறும் வரை கிளறி, வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும். நறுக்கிய மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்துக்கு அரைத்து, ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள பால் கலவையைச் சேர்த்து ஒன்றாக அரைக்கவும்.
இதை ஒரு பௌலில் மாற்றி பிரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து, எடுத்து மீண்டும் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்துக்கு மாற்றி, 8 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு பரிமாறவும்.
சாக்லேட் ஐஸ்கிரீம்
தேவையான பொருள்கள்:
பால் - 1/2 லிட்டர்
கோகோ பவுடர் - 6 மேசைக்கரண்டி
சாக்லெட் எசென்ஸ் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி
செய்முறை: பாலைச் சூடாக்கி, அதில் கோகோ பவுடர், சாக்லெட் எசென்ஸ் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். பிறகு சர்க்கரையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கெட்டியான பதம் வந்ததும், இறக்கி ஆற வைத்து ஃப்ரீசரில் வைத்துக் கெட்டியானதும் சாப்பிடவும்.
-செளமியா சுப்ரமணியன், பல்லாவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.