ஹேமந்த் குமார் ரௌத்
பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக் சமீபத்தில் திடீர் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹெட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம், சத்தமான ஒலிகளை கேட்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
ஹிந்தியில் 90-களில் முன்னணி பாடகியான இவர், இதுவரை பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் 'ஓரம் போ' படத்தில் 'இது என்ன மாயம்..' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியுள்ளார்.
அல்கா யாக்னிக்கிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சென்சார்நியூரல் திடீர் செவித்திறன் இழப்பு (SSNHL). இது திடீர் காது கேளாமை அல்லது திடீர் செவித்திறன் இழப்பு என்று கூறப்படுகிறது. இது செவித்திறன் இழப்பின் தொடக்க நிலையாகவும் கருதப்படுகிறது.
நாட்டில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
72 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான கால அளவில் செவித்திறன் குறைவது 'சென்சார்நியூரல் செவித்திறன் இழப்பு' எனப்படுகிறது. ஒரு காது மட்டும் அல்லது இரண்டு காதிலும் பாதிப்பு ஏற்படலாம். பாதிப்புக்கு முன்னதாக எந்த அறிகுறிகளும் இருக்காது. இது ஆபத்தானதும்கூட என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்சார்நியூரல் செவித்திறன் இழப்பில் 4 வகைகள் உள்ளன.
1. ஒரு காது மட்டும் பாதிப்பு
2. இரண்டு காதுகளும் பாதிப்பு
3. ஒழுங்கற்ற பாதிப்பு,
4. திடீர் செவித்திறன் இழப்பு.
நம் நாட்டின் மக்கள்தொகையில் 8- 15% பேர் ஒரு புறம் பாதிப்பையும், 1-4% பேர் இரு புறமும் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் காது கேளாமை, ஒரு லட்சம் பேரில் 5-20 பேர் வரை பாதிக்கிறது.
இதில் ஒருபுறம் பாதிப்பு, இளம், நடுத்தர வயதினரிடம் அதிகம் காணப்படுகிறது. 90%-க்கும் அதிகமாக செவித்திறன் பாதிப்பு கொண்ட வயதானவர்களுக்கும் ஏற்படுகிறது.
திடீர் செவித்திறன் இழப்பு அனைத்து வயதினரையும் தாக்கும். அதிக சத்தத்தைக் கேட்பது, மரபணு காரணிகள் அல்லது வயது முதிர்வினால் ஏற்படுகிறது. இதில் இளம் வயதினர் அதிக சத்தத்தைக் கேட்பதால் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் கரோனா காலத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார் புவனேஸ்வரில் உள்ள எஸ்.யு.எம். அல்டிமேட் மெடிகேர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாமதாப் சாஹு.
காரணங்கள்
சென்சார்நியூரல் செவித்திறன் இழப்பு திடீரென ஏற்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகள், சளித் தொற்றுக்குப் பிறகு திடீரென காது கேளாமையால் பாதிக்கப்படுகின்றனர். ஹெர்பெஸ் மற்றும் வெரிசெல்லா போன்ற பொதுவான வைரஸ்களால் பெரியவர்களையும் பாதிக்கலாம். கீமோதெரபி மருந்துகள், கடுமையான இரைச்சலினால் ஏற்படும் அதிர்ச்சி, கட்டிகளில் திடீர் ரத்தப்போக்கு, மூளைக்காய்ச்சல், பக்கவாதம், வலி நிவாரணி அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளுதல், காசநோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றினால் ஏற்படுகிறது.
பலருக்கு சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், இவையெல்லாம் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வைரஸ் தொற்றுகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவினால் ஏற்படும் நோய்கள், அதிர்ச்சி, ஓட்டோடாக்ஸிக் மருந்துகள், கட்டிகள், நரம்பியல் கோளாறுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஆகியவை சில காரணங்களாகும்.
மணிப்பால் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சமரேந்திர பெஹெரா கூறுகையில், உள் காது மற்றும் கேட்கும் நரம்பு (காக்லியர் நரம்பு) சேதமடையும் போது திடீர் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முதுமை முதல் காரணம்.
தலையில் காயம், உள் காதில் வைரஸ் தொற்று, காதில் நரம்பு பாதிப்பு, கட்டிகள், அதிக சத்தம் போன்றவை இதர காரணங்கள். சளி, தட்டம்மை அல்லது காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் உள் காதில் வீக்கம் அல்லது சேதத்தை ஏற்படுத்தும் என்றார்.
பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் டாக்டர் கிரிஷ் ஆனந்த், 'அதிக அளவு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், சில கீமோதெரபி சிகிச்சைகள் செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். செவி நரம்பு மற்றும் மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் போன்ற நரம்பு அமைப்புகளை பாதிக்கும் கட்டிகள், மூளையில் உள்ள செவிவழிப் பாதைகளையும் பாதிக்கலாம், இதனாலும் திடீர் செவித்திறன் இழப்பு ஏற்படலாம்' என்றார்.
அறிகுறிகள், கண்டறிதல்
'செவித்திறன் திடீரென குறைவது, காதில் லேசான சத்தம் அல்லது சலசலப்பு ஒலி கேட்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அடுத்து தலைச்சுற்றலும் இருக்கும். உடல் பரிசோதனை, செவித்திறன் சோதனைகள், ஆடியோமெட்ரி, டிம்பனோமெட்ரி மற்றும் செவிவழி மூளைத்தண்டு பதில் போன்றவற்றின் மூலம் இந்த நிலை கண்டறியப்படுகிறது' என்று டாக்டர் ஆனந்த் கூறினார்.
சிகிச்சை
செவித்திறன் இழப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை அல்ல, ஆனால் சிகிச்சை எடுக்காவிட்டால் பாதிப்பு அதிகரிக்கும். கார்டிகோஸ்டீராய்டுகள் என்பது முதற்கட்ட சிகிச்சை ஆகும். ப்ரெட்னிசோன் போன்ற மருந்துகள் உள் காதில் வீக்கம் மற்றும் தொற்றைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன. இது செவித்திறனை மீட்டெடுக்க உதவும். சிகிச்சையில் சில வாரங்களில் பாதிப்பு குறைகிறது.
ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை என்பது தூய ஆக்ஸிஜனை சுவாசிப்பது, உள் காதுக்கு ஆக்ஸிஜன் செல்வதை அதிகரித்து காது கேளாமையைக் குணப்படுத்த உதவுகிறது. வைரஸ் தொற்று காரணமாக இருந்தால் வைரஸ் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைவு அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இருந்தால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையின் டாக்டர் லக்ஷ்மி ரஞ்சித், 'திடீர் காது கேளாமைக்கு ஸ்டீராய்டு சிகிச்சையில் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினார். இதில் ப்ரெட்னிசோன் மருந்து வாய்வழியாக எடுத்துக்கொள்ளுதல் அல்லது இன்ட்ராடிம்பானிக் ஸ்டீராய்டு ஊசி செலுத்துவதாகும். தலைச்சுற்றல் அல்லது பிற சிக்கல்கள் உள்ளவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு' என்றார்.
'திடீர் செவித்திறன் இழப்பின் முதல் சில மணிநேரங்கள் முக்கியமானது. இது கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகிறது. உடனடி சிகிச்சை மேற்கொண்டால் செவித்திறன் இழப்பை மீட்டெடுக்கலாம். சிகிச்சை செய்தும் காது கேளாமை இருந்தால், காது கேட்கும் கருவிகள் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது' என டாக்டர் சாஹு கூறினார்.
தடுப்பது எப்படி?
காது கேளாமை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என டாக்டர் பெஹாரா கூறியது:
அதிக இரைச்சல் மிக்க ஒலியைக் கேட்கக் கூடாது. ஹெட்போன்களில் அதிக ஒலியை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.
சில மருந்துகள் செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடலின் பிற பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது.
வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சீரான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
சளி மற்றும் தட்டம்மை போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வது.
காது நோய்த் தொற்று அல்லது காது கேளாமையின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் உடனடி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழில் - எம். முத்துமாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.