- டாக்டர் ரேவதி அனந்த்
ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது முதலில் ஒரு தாயாக இருப்பதை பெருமையாக நினைக்க வேண்டும். தாயைப்போல பெருமையாக நினைக்க வேண்டிய விஷயம் எதுவுமில்லை. யாரும் செய்ய முடியாததை பெண்களால் மட்டுமே செய்ய முடிகிறது. அதில் முதலில் இருப்பது தாய்மை.
தாய்மையின்போது ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தன்னுடைய கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில பெண்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் சுரக்காது. அதற்காக உடனடியாக பாக்கெட் பால் என்ற முடிவுக்குப் போகக் கூடாது.
நல்ல ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு மார்பக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொண்டால் நிச்சயமாக தாய்ப்பால் வரும். சில காரணங்களால் தாய்ப்பால் குறைவாக வருமே தவிர மற்ற பிரச்னைகளுக்கு பெண்களின் மனம்தான் காரணம். தாய்ப்பால் கொடுக்க பொறுமையாக இருக்க வேண்டும். இவ்வளவு நேரம் உட்கார வேண்டியிருக்கிறது என்று நினைக்கக் கூடாது. முக்கியமாக நகரங்களில் இருப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். கிராமங்களில் இது போன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவு.
ஏனெனில் நகர்ப்புறங்களில் படித்து வேலைக்குச் செல்கிறார்கள், பின்னர் திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். வேலையின் காரணமாக அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஒரு தண்டனையாகப் பார்க்கிறார்கள். அப்படி நினைக்கக் கூடாது. முதலில் கடினமாக இருக்கும்.
குழந்தையை அரவணைத்து பாடல் பாடி குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் மகிழ்ச்சி அடையும்போது நன்றாக இருக்கும். இரு மார்பகங்களிலும் குறைந்தது 20 நிமிடங்களாவது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்தால் எதிர்ப்பு சக்தி அனைத்தும் குழந்தைக்கு கிடைக்கும். குறைந்தபட்சம் குழந்தையின் முதல் ஆறு மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்களின் மருத்துவரின் அறிவுரைப்படி, குழந்தையின் ஊட்டச்சத்துக்காக வேகவைத்த காய்கறிகள் உள்ளிட்டவற்றைக் கொடுக்கலாம். மருத்துவரை பார்க்கும்போது அடுத்த குழந்தையை தள்ளிப்போடுவதற்கான அறிவுரைகளை கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளி குறைந்தபட்சம் 3-ல் இருந்து 4 வருடங்கள் என இருந்தால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
குழந்தை பிறந்தவுடன் மருத்துவரிடம் சென்று தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். தவிர்க்கக் கூடாத காரணங்களால் உங்களால் போட முடியவில்லை என்றாலும் நேரம் தாழ்ந்தும்கூட கட்டாயம் தடுப்பூசிகளை போட்டுவிட வேண்டும். அப்போது மட்டுமே குழந்தைகளை கடுமையான நோய்களிடமிருந்து பாதுகாக்க முடியும்.
போலியோ, டிப்தீரியா மட்டுமின்றி இப்போது மீசல்ஸ், மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க தடுப்பூசிகள் வந்துவிட்டன. இன்றைக்கு பல நோய்கள் வருகின்றன. எனவே தடுப்பூசிகளும் அதிகரித்துவிட்டன. எனவே இதனை சிரமமாக நினைக்காமல் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அட்டவணைகளை சரியாகப் பின்பற்றி தடுப்பூசி போட வேண்டும்.
குழந்தையின் எடை, உயரம், வளர்ச்சி அனைத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பெண் குழந்தையை வளர்க்கும்போது முக்கிய ஆலோசனை என்னவென்றால், பெண் குழந்தை பிறந்தது முதலே பிறப்புறுப்பை மேலிருந்து கீழாக கழுவ வேண்டும். கீழிருந்து மேலாக சுத்தம் செய்தால் கிருமிகள் ஆசன வாய்க்குள் செல்ல வாய்ப்பு உண்டு. குழந்தைக்கு சிறுநீரகத் தொற்றும் வர வாய்ப்பு உண்டு.
அதேபோல குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பரை மாற்றுவது மிக அவசியம். இல்லையென்றால் அந்த இடங்களில் தோல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
ஒரு பெண் குழந்தை வளர்ந்து பள்ளிக்குச் செல்லும்போது பாலியல் தொந்தரவுகள் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். யாரேனும் தொந்தரவு செய்தால் அதிலிருந்து எப்படி வெளியே வருவது, எப்படி கையாள்வது என தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
குழந்தை பூப்பெய்தும்போது அதனை ஒரு சாதாரண வளர்ச்சிதான் என்று குழந்தைக்கு அந்த தாய் சொல்ல வேண்டும்.
அதேபோல ஒரு பெண் குழந்தை தன்னைத்தானே பார்த்துக்கொள்வதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரோக்கியம். இப்போதெல்லாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் திடீர் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு மாதவிடாய் சரியாக இருப்பதில்லை.
உடல் பருமன் வராமலிருக்க நல்ல உணவும் உடற்பயிற்சியும் மிக முக்கியம் என்பதை பெண் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
குழந்தை பெற்றவுடன் தாய்மார்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் சரியாக கவனித்து மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். குழந்தை பெற்ற பின்னர் சில ஆண்டுகளில் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது மாதவிடாய் தள்ளிப்போதல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.
எனவே, குழந்தை பெற்ற பின்னர் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம். 30 வயதிற்கு மேல் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒருமுறையாவது மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.
விஞ்ஞானரீதியாக இப்போது பெரிய மாற்றங்கள் வந்துவிட்டன. ஸ்கேன் மூலமாக கட்டிகள் எல்லாம் இதில் கண்டறிய முடிகிறது. சிறுநீரகக் கல், மார்பகக் கட்டிகளை எளிதில் கண்டறிந்தால் அவற்றை பெரிய பிரச்சினையாவதற்கு முன்பே தடுத்து விடலாம். மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொண்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கலாம். இளம் பெண்களுக்கு இப்போது அதிகமாக மார்பகப் புற்றுநோய் வருவதை பார்க்க முடிகிறது. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனைகளைச் செய்தாலே போதுமானது.
நாட்டில் அதிகளவில் பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள் கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்.
மாதவிடாய் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பெண்களே தங்கள் மார்பகத்தை பரிசோதனை செய்துகொள்ளலாம். வெளிநாட்டில் இந்த சுய பரிசோதனை முறை கடைபிடிக்கப்படுகிறது.
மார்பகத்தை நான்காக பிரித்துக்கொண்டு, அதனை அழுத்திப் பார்த்து கட்டி இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம். இதனை கற்றுக்கொண்டு மாதம் ஒருமுறை மாதவிடாய் முடிந்த பின்னர் இந்த சோதனையை செய்வது நல்லது. கருப்பை வாய் புற்றுநோய் இருந்தால் மாதவிடாய் இல்லாத காலத்தில் உதிரப் போக்கு, துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி என்பது மிக முக்கியமான ஒன்று. பூப்பெய்திய பெண்களுக்கு இப்போது இந்த தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனைத் தவிர்த்து பைபராய்டுகள் கருப்பையில் ஏற்படும் சாதாரண கட்டிகள், சினைப்பையில் கட்டிகளும் வரலாம்.
அதனால் ஆண்டிற்கு ஒருமுறை நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வதுபோல உங்கள் மற்ற உறுப்புகளின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருப்பை சார்ந்து வரும் பிரச்னைகளை இப்போதெல்லாம் ரத்த பரிசோதனையிலே அறிகிறார்கள். எனவே, உங்களுக்கு வரும் பிரச்னைகளை மருத்துவரிடம் வெளிப்படையாக பேசி ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. நீங்களே தேவையில்லாமல் ஸ்கேன்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பலரும் பரிசோதனை செய்துவிட்டு அதைக்கொண்டு வந்து கேட்கிறார்கள். நீங்கள் என்ன ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூற வேண்டும்.
தேவையில்லாத ஸ்கேன் வேண்டாம், அதேநேரத்தில் தேவையான ஸ்கேன் எடுப்பதும் அவசியம்.
40-50 வயதில் வரும் மூட்டு வலிகளை உடற்பயிற்சி, யோகா மூலம் சரி செய்யலாம். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவளிக்க வேண்டும் என்று உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள கூடாது. ஒரு பெண் தாய்மை, முதுமை இரண்டிலும் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.