மக்களைவைத் தேர்தல் 2019

பாஜகவின் கோட்டையில் திக்விஜய் சிங்

72 வயதாகும் திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது கண்டனத்தில் சிக்கி

DIN



72 வயதாகும் திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது கண்டனத்தில் சிக்கி வருபவர். 2013-இல் தங்கள் கட்சி எம்.பி. மீனாட்சி நடராஜனின் அழகை வர்ணித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானவர். பின்லேடன் இறுதிச் சடங்கு தொடர்பான கருத்து முதல் ஹிந்து பயங்கரவாதம் என்ற கருத்து வரை இவர் உருவாக்காத சர்ச்சைகளே கிடையாது.

1969-ஆம் ஆண்டு நகராட்சிக் குழு தலைவராகத் தேர்வாகி அரசியலுக்கு வந்தவர். 1970-இல் ஜனசங்கத்தில் இணைய அவருக்கு அழைப்பு வந்தது. எனினும், அவரது விருப்பம் காங்கிரஸ் கட்சியாக இருந்தது. அதைத் தொடர்ந்து எம்எல்ஏவான அவர், மத்தியப் பிரதேச காங்கிரஸில் ஏறுமுகத்தில் பயணித்தார். ராஜீவ் காந்தியின் நம்பிக்கையைப் பெற்றதன் மூலம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவரானார். 1984-இல் ராஜ்கர் தொகுதி எம்.பி.யானார். இதன் மூலம் அத்தொகுதியில் வென்ற முதல் காங்கிரஸ் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். 1993-இல் எம்.பி. பதவியையை ராஜிமாநா செய்துவிட்டு மத்தியப் பிரதேச முதல்வரானார். தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தார்.

அதன் பிறகு பல்வேறு மாநிலங்களின் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களாக இருந்தார். இளைஞர்கள் சட்டப் பேரவைக்கு வர வேண்டும் என்பதால் இனி பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று 2012-ஆம் ஆண்டில் அறிவித்தார். அடுத்த ஆண்டிலேயே அவரது மகன் ஜெய்வர்த்தன் சிங் காங்கிரஸ் இணைந்து இளைஞரணியில் முக்கியப் பொறுப்பைப் பெற்றார். 2014-இல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட திக்விஜய் சிங், இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

போபாலில் சாத்வி பிரக்யா ஹிந்துத்துவத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிந்து சாதுக்களின் ஆதரவு தனக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலும் சாதுக்கள் புடைசூழ ஊர்வலம் ஒன்றை திக்விஜய் சிங் அண்மையில் நடத்தினார். ஹிந்து பயங்கரவாதம் என்று தொடர்ந்து விமர்சித்து வந்த அவருக்கு இந்த பிரசார உத்தி எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது விரைவில் தெரியும்.

1989-ஆம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக போபால் தொகுதியை பாஜக தன் வசம் வைத்துள்ளது. அதிலும் கடந்த 7 தேர்தல்களில் அங்கு பாஜக 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் அந்தத் தொகுதியில் பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்துவாரா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT