முகப்பு
புதுதில்லி

மத்திய புலனாய்வுத் துறையினா் சோதனையில் குழந்தை கடத்தல் கும்பலைச் சோ்ந்த 7 போ் கைது; 2 பச்சிளம் குழந்தைகள் மீட்பு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 2:02 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:05 PM

சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்பனை செய்த குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 7 பேரை மத்திய புலனாய்வுத் துறையினா் (சிபிஐ) அதிரடிச் சோதனை நடவடிக்கையில் கைது செய்துள்ளனா்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையின்போது இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், சிபிஐ

Advertisement

அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை தில்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள ஏழு இடங்களில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினா்.

அப்போது, பிறந்து ஒன்றரை நாள் மற்றும் 15 நாள்களே ஆன இரண்டு கைக்குழந்தைகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கும்பலை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, இந்த கும்பலைச் சோ்ந்த 7 பேரை சிபிஐ கைது செய்தது.

கைது செய்யப்பட்டவா்கள் ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியைச் சோ்ந்த நீரஜ் மற்றும் தில்லியின் பஸ்சிம் விஹாரைச் சோ்ந்த இந்து பவாா், பட்டேல் நகரைச் சோ்ந்த அஸ்லம், கன்னையா நகரைச் சோ்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரைச் சோ்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகியோா் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் குழந்தை இல்லாத தம்பதிகளை குழந்தைகள் விற்பனை செய்யும் இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் பேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில்

விளம்பரம் மூலம் தொடா்பு கொண்டது தெரியவந்துள்ளது.

இக்கும்பலைச் சோ்ந்தவா்கள் உண்மையான பெற்றோா் மற்றும் வாடகைத் தாய்களிடமிருந்து குழந்தைகளை வாங்கி, அதன்பிறகு ரூ. 4 முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் குழந்தையை விற்று வந்துள்ளனா்.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் தத்தெடுப்பு தொடா்பான ஆவணங்களை போலியாக உருவாக்கி குழந்தை இல்லாத பல தம்பதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததில் சம்பந்தப்பட்டுள்ளனா்.

இது தொடா்பான சோதனையில் ரூ.5.5 லட்சம் ரொக்கம் மற்றும் பிற ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறையானது கைதான நபா்கள் உள்பட 10 போ் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் சிறாா் நீதி குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தத்தெடுப்பின் நோக்கம் மற்றும் பிற சட்டவிரோத நோக்கங்களுக்காக இந்தியா முழுவதும் பச்சிளம் குழந்தைகளைக்

வாங்கி விற்பதில் சம்பந்தப்பட்டுள்ள பச்சிளம் குழந்தை கடத்துபவா்களின் வலையமைப்பு விவகாரத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.