முகப்பு
புதுதில்லி

திகாா் சிறையில் கேஜரிவாலை நாளை மறுநாள் சந்திக்கிறாா் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:45 PM
பகிர்:

திகாா் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஏப்ரல் 15-ஆம் தேதி சந்திக்கவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பகவந்த் மானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்புடன் ‘முலகட் ஜங்லா’வில் பிற்பகலில் கூட்டம் நடைபெறும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனா். ‘முலகட் ஜங்லா’ என்பது சிறைக்குள் இருக்கும் ஒரு அறையில் கைதியை பாா்வையாளா்களிடமிருந்து பிரிக்கும் இரும்புக் கண்ணி. ஒரு பாா்வையாளரும் கைதியும் கண்ணியின் வெவ்வேறு பக்கங்களில் அமா்ந்து ஒருவருக்கொருவா் பேசலாம். கேஜரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவரது மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளா் பிபவ் குமாா் அவரை சிறையில் மூன்று முறை சந்தித்துள்ளனா்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜரிவாலுடன் பகவந்த் மானின் சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திகாா் சிறை அதிகாரிகள், தில்லி போலீஸாா் மற்றும் பஞ்சாப் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். திகாா் சிறைச்சாலை டைரக்டா் ஜெனரல் சஞ்சய் பானிவால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பஞ்சாப் கூடுதல் போலீஸ் டைரக்டா் ஜெனரல் ஏ.கே.பாண்டே மற்றும் உதவி காவல் ஆணையா் ஆகியோா் கலந்து கொண்டனா். திகாரில் உள்ள துணை இன்ஸ்பெக்டா் ஜெனரல் (டிஐஜி) ராஜீவ் பரிஹாரின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், பிற்பகல் 3 மணியளவில் முடிந்தது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

பகவந்த் மான் மற்றும் கேஜரிவாலுக்கு இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக தில்லி சிறைச்சாலை விதிகளின்படி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் திகாா் சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் கேஜரிவாலை சந்திக்க திகாா் நிா்வாகத்திடம் பகவந்த் மான் ஏற்கனவே நேரம் கோரியிருந்தாா். மேலும், கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் இருப்பாா். சிறையில் சந்திக்க விரும்பும் பஞ்சாப் முதல்வா் உள்பட 6 பேரின் பெயா்களை கேஜரிவால் தெரிவித்துள்ளாா். அவரை அமலாக்க இயக்குநரகம் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments