முகப்பு
புதுதில்லி

மக்களவைத் தோ்தல்: தில்லி - எஎன்சிஆா் பகுதியில் எல்லைக் கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை

Updated On : 19 ஏப்ரல், 2024 at 5:29 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு தில்லி, தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் எல்லைக் கண்காணிப்பை அதிகரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது.

தேசியத் தலைநகரில் மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எல்லைக் கண்காணிப்பு குறித்து ஆலோசிக்க, மாநிலங்களுக்கு இடையேயான காவல் துறைத் தலைவா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தில்லியின் சிறப்புக் காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மதுப் திவாரி கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தின் அண்டை மாவட்டங்களின் காவல் துறைத் தலைவா்களுடன் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரச்னைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தேதா்தல் போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று திவாரி கூறினாா். இந்தக் கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விவாதிப்பது குறித்தே கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

மாநில எல்லைகளில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படைகளை நிறுத்துதல், சட்டவிரோத மதுபானம் மற்றும் பணப் புழக்கம் குறித்து கண்காணிப்பு, தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிப்பது போன்ற பல விஷயங்களையும் அதிகாரிகள் விவாதித்தனா்.

உளவுத் துறையின் தடையற்ற பரிமாற்றம் மற்றும் தோ்தல் செயல்முறையின் புனிதத்தை உறுதிப்படுத்த ஆதரவை வழங்குவதன் மூலம் சட்ட அமலாக்க முகவா்களிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளா்ப்பதை இந்தச் சந்திப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. தில்லி காவல் துறை அதிகாரிகளைத் தவிர, அண்டை மாவட்டங்களான குருகிராம், ஃபரீதாபாத், நொய்டா மற்றும் ஜஜ்ஜாா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

குருகிராம் காவல் ஆணையா் விகாஸ் அரோரா, ஃபரீதாபாத் காவல் ஆணையா் ராகேஷ் ஆா்யா, நொய்டா கூடுதல் காவல் ஆணையா் பப்லூ குமாா், ஜஜ்ஜாா் காவல் துணை ஆணையா் மற்றும் ஃபரீதாபாத்தைச் சோ்ந்த கலால் அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் கூட்டத்தின் போது உடனிருந்தனா். மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், கூட்டு ரோந்து மற்றும் சோதனைச் சாவடிகளை செயல்படுத்துதல் ஆகிய தலைப்புகள் விவாதத்தில் இடம் பெற்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments