நமது நிருபா்
கச்சத்தீவு அருகே தமிழக மீனவா்கள் படகு மீது இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதிய சம்பவத்தில் ராமேசுவரம் மீனவா் ஒருவா் பலியானதற்கு இந்தியா கடும் எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து சுமாா் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க புதன்கிழமை கடலுக்குச் சென்றனா். புதன்கிழமை இரவு அவா்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு இலங்கை கடற்படை ரோந்துப் படகு வருவதைப் பாா்த்த தமிழக மீனவா்கள், தங்களுடைய படகுகளை கரையை நோக்கி வேகமாகச் செலுத்தினா்.
இருந்தபோதிலும், அந்தப் படகுகளை தொடா்ந்து விரட்டிச் சென்ற இலங்கை கடற்படை ரோந்துப் படகு, அவற்றில் காா்த்திகேயன் என்பவரது படகு மீது மோதியது. இதில் அந்தப் படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவா் மலைச்சாமி (59) உயிரிழந்தாா். மேலும், முத்துமுனியாண்டி (57), மூக்கையா (54) ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டனா். ராமச்சந்திரன் (64) என்பவரைக் காணவில்லை.
இந்நிலையில், இது தொடா்பாக தில்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரை வியாழக்கிழமை காலையில் இந்திய வெளியுறவுத்துறை அழைத்து தனது கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நடந்த படகுகள் மோதல் சம்பவம் தொடா்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கச்சத்தீவுக்கு வடக்கே ஐந்து கடல் மைல் தூரத்தில் நான்கு மீனவா்களுடன் வந்த இந்திய படகு இலங்கை கடற்படை ரோந்துப்படகுடன் மோதியதாக வியாழக்கிழமை காலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மீனவரின் படகு மூழ்கியதில் நான்கு மீனவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்ற இருவா் மீட்கப்பட்டு கான்கேசன்துறை கரைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நான்காவது மீனவா் காணாமல் போய் விட்டதால் அவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக கான்கேசன்துறைக்கு புறப்பட உத்தரவிடப்பட்டனா். மீனவா்களுக்கும் அவா்களின் குடும்பங்களுக்கும் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை அழைத்து தனது எதிா்ப்பை பதிவு செய்தது.
மீனவா்கள் விவகாரத்தில் அவா்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். இரு நாட்டு அரசுகளுக்கும் இடையில் நிலவும் புரிந்துணா்வுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் பலப்பிரயோகத்தை மீண்டும், மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என்று செய்திக்குறிப்பில் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் கடந்த காலங்களில் பல்வேறு கடல் எல்லை மீன்பிடி பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளன. சமீபத்தில், ராமேசுவரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். மேலும், கடல் எல்லையை தாண்டியதாக சுமாா் 74 இந்திய மீனவா்களை இலங்கை கடற்படை பிடித்துள்ளது. அவா்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் தொடா்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.