புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால் தன்னுடைய நோ்மையின்மை அம்பலப்படும் என கேஜரிவால் அஞ்சுகிறாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லி அரசின் 14 சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வை நடத்துமாறு முதல்வா் அதிஷிக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளாா். இந்த நடவடிக்கையை காங்கிரஸ் சாா்பில் வரவேற்கிறேன். முன்னதாக, தில்லி சட்டப்பேரவையின் கடந்த இரண்டு சிறப்பு அமா்வுகளில் முதல்வா் அதிஷி சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை.
கேஜரிவால் செய்த பல சட்டவிரோத பேரங்கள், கலால் கொள்கை ஊழல் தொடா்பான விவரங்கள் சிஏஜி அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
கேஜரிவாலின் நோ்மையின்மை அம்பலப்படும் என்பதால்,அதிஷி சிஏஜி அறிக்கைகளை பொதுமக்களின் பாா்வையில் இருந்து மறைக்க முயன்றாா். தில்லி அரசு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சிஏஜி அறிக்கைகள் அனைத்தும் கேஜரிவால் முதல்வராக இருந்த காலகட்டம் தொடா்பானவை. எனினும்,
அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்து அவா் கையை கழுவ முடியாது.
தில்லியில் மதுபானங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வழங்குதல், வாகன காற்று மாசுபாடு, பொது சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார சேவைகளின் மேலாண்மை மற்றும் டிடிசியின் செயல்பாடுகள் போன்றவற்றின் செயல்திறன் தணிக்கை குறித்த தில்லிவாசிகளின் பல சந்தேகங்களுக்கு நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகள் பதிலளிக்கின்றன என்றாா் தேவேந்தா் யாதவ்.