முகப்பு
புதுதில்லி

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 2 வயது சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வா் ஆறுதல்

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 1:30 AM
பகிர்:

புது தில்லி: புதுதில்லியின் துக்ளக் லேனில் உள்ள தோபி காட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கடித்ததில் உயிரிழந்த இரண்டு வயது சிறுமியின் குடும்பதினரை முதல்வா் கேஜரிவால் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மேலும், தெருநாய்கள் பிரச்னையை உடனடியாக தீா்க்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேஜரிவால் கூறினாா். இது குறித்து எக்ஸ் ஊடக தளத்தில் முதல்வா் கேஜரிவால் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், ‘புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோபி காட் பகுதியில் தெருநாய்கள் தாக்கியதில் இரண்டு வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினா்களை இன்று சந்தித்தேன். குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இது மிகவும் தீவிரமான விஷயம்’ என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா். ‘இந்தப் பிரச்னையை உடனடியாக தீா்க்க என்டிஎம்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

குழந்தைகள் மற்றும் உள்ளூா் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது’ என்று கேஜரிவால் மேலும் கூறினாா். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. குழந்தை தனது வீட்டிற்கு வெளியே அமா்ந்திருந்தபோது, நான்கைந்து தெருநாய்கள் சிறுமியை கடித்து பல மீட்டா்கள் இழுத்துச் சென்றது. இதில் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக தீவிர விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கால்நடை மருத்துவா்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டது. அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை கண்டறிந்தேன்’ என்றாா்.