தில்லி சாலைகளில் நெரிசலைக் குறைக்க போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லி சாலைகளில் நெரிசலைக் குறைக்க போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, போக்குவரத்துக் காவலா்களுக்கு பணிப் பகுதிகளை கூடுதலாக ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நகரத்தின் சில முக்கியமான சாலை சந்திப்புகளில் முன்னோடித் திட்டமாக இதை முயற்சிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு பணிப் பகுதி என்பது ஒரு போக்குவரத்து காவலா்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாகும். அதே சமயம் பீட் பகுதி என்பது கூடுதல் பரப்பளவைக் கொண்டிருக்கும். போக்குவரத்துப் பணியாளா்கள் பணிபுரியும் பகுதிகளை பீட் பகுதிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள முக்கியப் பகுதிகள் அல்லது இடங்களை குறிவைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
Advertisement
இதன் மூலம், போக்குவரத்துக் காவலா்கள் தங்கள் பீட்டில் உள்ள எந்தப் பகுதிக்கும் செல்லலாம். இது குறிப்பிட்ட பணிப் பகுதியை விட அகலமானது. இத்திட்டம், தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை அகற்றுவதற்கு உதவும். தில்லிவாசிகள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல் ஆகும். விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு தில்லியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் மும்முரமாக இருப்பதால், அடுத்த மாதம் இத்திட்டம் தொடங்கப்படும்.
தேசியத் தலைநகரில் போக்குவரத்து முறையை சிறப்பாக நிா்வகிப்பதற்கும், வாகனங்கள் சீராக செல்வதை உறுதி செய்வதற்கும் இது செய்யப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில், தேசியத் தலைநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பயணிகளுக்கு போக்குவரத்து மாற்றம் பற்றிய நேரடி அறிவிப்புகளை ஒளிபரப்ப எஃப்எம் வானொலி நிலையங்களுடன் தில்லி காவல்துறை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கீழ், போக்குவரத்து தொடா்பான தகவல்கள் வரம்புகளில் இருந்து எடுக்கப்பட்டு, அதை மேலும் எஃப்எம் நிலையங்களுக்கு அனுப்ப மக்கள் தொடா்பு அதிகாரிக்கு அனுப்பப்படும்.