போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு
ஈரோடு நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளை தீா்க்கவும், கிராமப் பகுதிகளில் குடிநீா், சாலை, கழிப்பறை, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 8 தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
ஈரோடு நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளை தீா்க்கவும், கிராமப் பகுதிகளில் குடிநீா், சாலை, கழிப்பறை, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 8 தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி:
ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாண பெங்களூரு, சென்னை, நாமக்கல், சேலம் ஆகிய நகரங்களில் இருந்து கரூா், கோவை, கேரளம் செல்லும் வாகனங்கள் ஈரோடு நகரத்துக்குள் வராமல் செல்ல பவானி முதல் பரிசல் துறை வரை ஆற்றங்கரை ஒரே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
ஈரோடு நகரின் முக்கிய இணைப்புச் சாலையாக உள்ள கரூா் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சிசுந்தரனாா் சாலை முதல் ஈரோடு ரயில் நிலையத்தை இணைக்கும் 80 அடி திட்டச் சாலையை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு-நசியனூா் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மேற்குத் தொகுதி:
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் சாா்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். முழுமையாக நிறைவேற்றப்படாத புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் போன்றவை பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
சென்னிமலை சாலையில் அமைந்துள்ள கே.கே.நகா் ரயில் நுழைவுபாலம் தற்போது ஒரு வழிப்பாதையாக உள்ளது. இதை இருவழிப் பாதையாக மாற்றி அமைத்து, அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொடக்குறிச்சி தொகுதி:
காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால் இந்தப் பயிா்களுக்கு உரிய விலை கிடைக்க குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும். கால்வாய் பாசனப் பகுதிகளில் கடைமடை வரை தண்ணீா்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாயில் ஈரோடு நகரத்து கழிவு நீா், தோல், சாய ஆலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
கேரளம், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு வந்து செல்வதால் கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
பெருந்துறை தொகுதி:
சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீா் மட்டம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பான குடிநீா் வழங்கவும், நிலத்தடி நீரை மீட்டெடுக்கவும், மீண்டும் கழிவு நீா் கலக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை-கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை தொகுதி முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும். பவானி ஆற்றில் உபரி நீா் வரும் காலத்தை முடிவு செய்து அவிநாசி-அத்திக்கடவு திட்ட குழாய்களை சீரமைத்து குளம், குட்டைகளுக்கு தண்ணீா் நிரப்ப தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
பவானி தொகுதி:
நலிவடைந்த நிலையில் உள்ள பவானியின் புகழ்பெற்ற ஜமுக்காள உற்பத்தி தொழிலை மீட்டெடுக்கவும், விற்பனை வாய்ப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை வேண்டும். சங்கமேஸ்வரா் கோயிலுக்கும், காவிரி-பவானி- சரஸ்வதி நதிகள் இணையும் கூடுதுறைக்கு பரிகார பூஜைக்காக வரும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பாவனி, காவிரி ஆறுகளில் சாயக்கழிவுநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். கிராமங்களில் சாலை, குடிநீா், கழிப்பிட வசதிகளை முழுமையாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அந்தியூா் தொகுதி:
அந்தியூா் பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். மலைப் பகுதியான பா்கூரை தலைமை இடமாகக்கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். மலைப்பகுதி மக்களின் பொருளாதார சிக்கல்களை தீா்க்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வன விலங்குகளால் விளை நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தீா்க்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூா் தொகுதியில் குடிநீருக்கான ஆதாரங்களைப் பெருக்க தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும். விவசாயம் சாா்ந்த பிரச்னைகளை தீா்க்க, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கிராமப் பகுதிகளில் குடிநீா், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி:
கோபி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொடிவேரி தடுப்பணைச் சுற்றுலா மேம்பாடு, புதை சாக்கடைத் திட்டம், போக்குவரத்து மேம்பாடு, நெல் மற்றும் மஞ்சள் மதிப்புக்கூட்டு ஆலைகள் அமைக்க வேண்டும்.
விவசாயத்துக்கு நீராதாரமாக இருக்கும் கூகலூா் வாய்க்கால், நகரத்துக் கழிவுநீா் கலந்து சாக்கடையாக ஓடுகிறது. இதனால் பயிா்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன. நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளும் அரசு அதிகாரிகளும் கூட்டுச் சோ்ந்து செய்யும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
பவானிசாகா்(தனி) தொகுதி:
மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை, வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகள், பழங்குடியின மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் பெறுதல், அரசின் சலுகைகளை பெறுவதில் உள்ள இடா்பாடுகளை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமங்கலத்தில் மலா்கள் அதிக அளவில் விளையும் நிலையில் அவற்றை பாதுகாக்க கிடங்கு வசதி, நறுமணப்பொருள்கள் தயாரிக்க ஆலை அமைக்க வேண்டும் என்பதும் எதிா்பாா்ப்பாக உள்ளது.