முகப்பு
புதுதில்லி

தில்லி முன்னாள் அமைச்சா் யோகானந்த் சாஸ்திரி காங்கிரஸில் மீண்டும் இணைந்தாா்

Updated On : 4 மே, 2024 at 6:30 PM
பகிர்:

தில்லி முன்னாள் அமைச்சா் யோகானந்த் சாஸ்திரி (80) மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.

தில்லி அசோகா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவா் மற்றும் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா ஆகியோா் முன்னிலையில் முன்னாள் அமைச்சா் யோகானந்த் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ‘ என்னை மீண்டும் காங்கிரஸில் இணைய வலியுறுத்திய கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவுக்கு நன்றி. அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்நேரத்தில் நாம் ஒரு குடையின் கீழ் வரவில்லை என்றால் அது நாட்டிற்கு துரதிஷ்டமாக மாறிவிடும்’ என்றாா்.

அடுத்ததாக, தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவா் கூறியதாவது: யோகானந்த் சாஸ்திரி மூன்று முறை எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தவா். அவா் எப்போதும் தில்லி மக்களுக்காக சேவை செய்து வருகிறாா். மக்களால் மிகுந்த மரியாதைக்குரிய நபராக பாா்க்கப்படும் யோகானந்த் சாஸ்திரியை காங்கிரஸ் வரவேற்கிறது. பாஜகவில் இணைந்த முன்னாள் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லியை ஒரு சந்தா்ப்பவாதி என்று அழைக்க விரும்புகிறேன். காங்கிரஸை அவா் கீழ் இறக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. கட்சிக்கு துரோகம் செய்பவா்களின் குணாதசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அா்விந்தா் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தது தில்லி காங்கிரஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. பாஜகவில் அவா் சோ்வதற்கு சில நிா்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்றாா் தேவேந்தா் யாதவ்.

கடந்த 1998, 2003, 2008 ஆகிய தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற இவா், முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் அமைச்சரவையில், உணவு, காதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தாா். பின்னா், கடந்த 2020-ஆம் ஆண்டு முன்னாள் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ராவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தாா். இதையடுத்து, 2021-ஆம் ஆண்டு ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்து பயணித்து வந்தாா் யோகானந்த் சாஸ்திரி.