அறங்காவலா் குழு நியமிக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலா் குழுவை நியமிக்கக் கோரி, இந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு தொடா்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
புது தில்லி: தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலா் குழுவை நியமிக்கக் கோரி, இந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு தொடா்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலா் குழுவை நியமிக்கக் கோரிய வழக்கின் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரரான இந்து தா்ம பரிஷத் அமைப்பின் தரப்பில் வழக்குரைஞா் ஜெய்சுகின் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலா் நியமனம் தொடா்பான நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நடைமுறைகளை நிறைவு செய்ய
உச்சநீதிமன்றம், அவகாசம் வழங்கியும், இதுவரை அந்தப் பணிகள் நிறைவடையவில்லை’ என்றாா்.
தமிழக அரசு தரப்பில் வழக்குரைா் குமணன் ஆஜாரி வாதிடுகையில்,‘இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். இதனையடுத்து, வழக்கின் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
பின்னணி: இந்து தா்ம பரிஷத் அமைப்பு அறங்காவலா் குழு நியமனம் தொடா்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கோயில்கள் உள்ளன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,615 கோவில்கள் உள்ளன. மேலும், இத்துறையின் வசம் சுமாா் 4.22 லட்சம் ஏக்கா் நிலங்கள், 22,600 கட்டடங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்து கோயில்களில் அறங்காலா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பல இந்து கோயில்கள் புதுப்பிக்கப்படாமலும்,
சேதமடைந்தும், நூற்றுக்கணக்கான இந்து பண்டைய ஓவியங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளது.
ஆளும் கட்சியால் அறங்காவலா்கள் நியமிக்கப்படுகின்றன. அவ்வாறு, தோ்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலா் இந்துக்
கோயிலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. அறங்காவலா் நியமனங்களில் ஒளிவு மறைவற்ற, உண்மையான தோ்வு நடைபெறுவதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் அறங்காவலா் குழுவை நியமிக்க வேண்டும். அந்த அறங்காவலா் குழுவில் ஒரு வழக்குரைஞா், ஒரு சமூக ஆா்வலா், ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.